எம்ஜிஆரை வெளியில் யாருக்கும் தெரியாதாம்: சிறுபிள்ளைத்தனமாக பேசிய அமைச்சர் சீனிவாசன்!

வியாழன், 22 ஜூன் 2017 (15:56 IST)
அஇஅதிமுக எனப்படும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கிய நிறுவனர் முன்னாள் முதல்வர் மறைந்த எம்ஜிஆர். தான் ஆரம்பித்த கட்சி மாநில அளவில் முடங்கிவிடக்கூடாது அது ஒரு தேசிய கட்சியாக விளங்க வேண்டும் என தனது கட்சிக்கு அஇஅதிமுக என பெயர் வைத்தார் அவர்.


 
 
ஆனால் அவரது கட்சியில் உள்ள மூத்த அரசியல்வாதியும் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் எம்ஜிஆரை வெளிமாநில முதல்வர்கள் யாருக்கும் தெரியாது என கூறியது கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அடுத்த ஜனவரி வரை தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட உள்ளது. இதன் முதல் விழா மதுரையில் ஜூன் 30-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்கான கால்கோள் விழா நேற்று அதிகாலை 5.30 மணிக்கு நடந்தது. சட்டப்பேரவை நடந்து வருவதால் இரவோடு இரவாக அமைச்சர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
 
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் நிரூபர் ஒருவர் இந்த விழாவுக்கு வெளிமாநில முதல்வர்களை அழைப்பீர்களா என கேள்வி எழுப்பினார். ஆனால் அதற்கு கொஞ்சமும் யோசிக்காமல் தம்பி அவுங்கள்ள யாருக்கு எம்ஜிஆரை பற்றி தெரியும் என்றார்.
 
திண்டுக்கல் சீனிவாசனின் இந்த பதிலை அருகில் நின்ற அமைச்சர்கள் கூட எதிர்பார்க்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அமைச்சர் செங்கோட்டையன் சுதாரித்துக்கொண்டு சென்னையில் நடைபெறும் விழாவில் அவர்களை அழைப்போம் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்