ஜெயலலிதாவிற்காகவே எம்.ஜி.ஆர். இந்த பாடலை பாடினார் - ஸ்டாலின் நையாண்டி

செவ்வாய், 3 மே 2016 (12:43 IST)
இந்த ஜெயலலிதாவிற்காகவே அடிமைப்பெண் படத்தில் எம்.ஜி.ஆர்., “ஏமாற்றாதே, ஏமாற்றாதே.. ஏமாறாதே, ஏமாறாதே’ என்று பாடியிருக்கிறார் என்று திமுக பொருளாளர் கூறியுள்ளார்.
 

 
சேலம் மாவட்டம், கெங்கவல்லி தொகுதியில் திமுக வேட்பாளர் ரேகா பிரியதர்ஷிணியை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பேசுகையில், ”ஜெயலலிதா. தமிழகம் எவ்வளவோ பிரச்சினைகளை சந்தித்தது. இதையெல்லாம் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாத ஜெயலலிதா இன்று ஊர் ஊராக பொய்களை பேசி வருகிறார்.
 
ஆக, ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்கு வசதியாக போலீசார் துணையோடு, அதிகாரிகளின் உதவியோடு அதிமுக அமைச்சர்களின் வீடுகளில் பணம் பதுக்கப்படுகிறது. இதை அறிந்த தேர்தல் ஆணையம் சில போலீஸ் அதிகாரிகளை மாற்றியவுடன், அதுகூட முழுமையாக மாற்றவில்லை.
 
இருந்தாலும் அதிமுக எம்.பி.க்கள் குழு, அதுவும் தம்பித்துரை தலைமையில் கேரளாவுக்கு ஓடுகிறார்கள். அங்கு சென்று டெல்லி தேர்தல் கமிஷனரை சந்தித்து, அதிகாரிகளை மாற்றுவது தவறு என்று வாதிடுகிறார்கள். ஆக இனி பணம் கொடுக்க முடியாது என்பதால் ஆர்.கே. நகர் உட்பட 234 தொகுதிகளிலும் தோல்வி உறுதி என்பதை சொல்லாமல் சொல்கிறார்கள்.
 
பல்வேறு ஊழல் வழக்குகளை மூடி மறைத்து விட்டு, “மகாராணி” போல ஜெயலலிதா ஊழல் பற்றி பேசுகிறார். வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்தை ஆடம்பரமாக நடத்தியபோது, ஒட்டியானம் சகிதமாக உடன்பிறவா சகோதரி சசிகலாவுடன் உலா வந்ததை நகை கடையே நடந்து வருதே என்று பேசிக்கொண்டார்கள். அந்தளவுக்கு கொள்ளையடித்த பணத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தார்கள்.
 
இப்படிப்பட்ட ஜெயலலிதாவிற்கு கலைஞரைப் பார்த்து குடும்ப ஆட்சி என்று சொல்ல என்ன தகுதியிருக்கிறது. ஏற்கனவே ஊழல் செய்து 4 ஆண்டு சிறை 100 கோடி ரூபாய் அபராதம் விதித்த பிறகும், 1000 கோடியில் சினிமா தியேட்டர்களை வாங்குகிறார்கள் என்றால், இப்படி பதவியை பயன்படுத்தி ஊழல் செய்து பணத்தை கொள்ளையடிப்பதற்காக மட்டும் ஆட்சி செய்கிறார்கள்.
 
இந்த ஜெயலலிதாவிற்காகவே அடிமைப்பெண் படத்தில் எம்.ஜி.ஆர்., “ஏமாற்றாதே, ஏமாற்றாதே.. ஏமாறாதே, ஏமாறாதே’ என்று பாடியிருக்கிறார்” என்று கூறியுள்ளார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்