எம்ஜிஆரின் 99-வது பிறந்த நாள்: முதல்வர் ஜெயலலிதா மாலை அணிவித்து மரியாதை

ஞாயிறு, 17 ஜனவரி 2016 (14:00 IST)
தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் 99 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரின் உருவசிலைக்கு முதல்வர் ஜெயலலிதா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


 
 
அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இன்று காலை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அங்குள்ள அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் உருவசிலைக்கு ஜெயலலிதா ரோஜாப்பூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
 
எம்ஜிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு 99 வது பிறந்த நாள் சிறப்பு மலரை ஜெயலலிதா வெளியிட்டார். இந்த சிறப்பு மலர்களை அமைச்சர்கள், வளர்மதி மற்றும் கோகுல இந்திரா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
 
பின்னர் அங்கிருந்த கட்சியினருக்கு இனிப்புகளை வழங்கி, கூடியிருந்த மக்களை பார்த்து கையசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் ஜெயலலிதா. முன்னதாக ஜெயலலிதா தலைமை கழகம் வருவதால் அவருக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
 
இவ்விழாவிற்கு தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞரணி, மகளிரணி, மாணவரணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு விவசாய பிரிவு மீனவர் பிரிவு மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில் நுட்ப பிரிவு உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்புகள் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்