மெட்ரோ ரயில் திட்டத்துக்கு வித்திட்டது ஜெயலலிதாதான்: சைதை துரைசாமி

செவ்வாய், 7 ஜூலை 2015 (07:36 IST)
மெட்ரோ ரயில் திட்டத்துக்கு வித்திட்டது ஜெயலலிதா தான் என்று மேயர் சைதை துரைசாமி கூறியுள்ளார்.
 
சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்ததற்காக ஜெயலலிதாவை பாராட்டி ஒரு சிறப்பு தீர்மானத்தை மேயர் சைதை துரைசாமி கொண்டு வந்தார்.
 
அப்போது சைதை துரைசாமி பேசியதாவது:-
 
சென்னை மாநகரின் மேம்பாட்டுக்காக கடந்த 3 ஆண்டுகளில் ரூ.18 ஆயிரத்து 222.37 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ள வழிவகை செய்த முதலமைச்சர் ஜெயலலிதா, சென்னை மாநகரை உலகத்தரத்துக்கு மேன்மைப்படுத்தும் வண்ணமாக கடந்த மாதம் 29 ஆம் தேதி சென்னை மெட்ரோ ரயில் பயணிகள் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
 
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு வித்திட்டதும், விரைந்து செயலாற்றி நிறைவேற்றி முடித்ததும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு தான். இத்திட்டம் ஒன்றும் கருணாநிதியின் மூளையில் உதித்த திட்டமோ அல்லது அவரது சிந்தனையில் செழித்த திட்டமோ அல்ல.
 
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் சிறப்புடன் நிறைவேற்றப்பட்டு, மெட்ரோ ரயிலின் சக்கரங்கள் அதன் தண்டவாளத்தில் வெற்றிகரமாக உருண்டோடுகிறது என்றால் அதற்கு முழு முதற் காரணம் ஜெயலலிதாதான்.
 
சென்னை மாநகரத்தின் கிரீடத்தில் மேலும் ஒரு மயில் இறகாக சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை மாநகருக்கு அர்ப்பணிப்பு செய்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சென்னை மாநகராட்சி தனது உளமார்ந்த பாராட்டுதல்களையும், பணிவார்ந்த நன்றிகளையும் மனம் உவந்து தெரிவித்துக்கொள்கிறது. இவ்வாறு சைதை துரைசாமி பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்