மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி அளித்ததில் முறைகேடு வழக்கு: அன்புமணி ராமதாசுக்கு ஜாமீன்

புதன், 27 ஆகஸ்ட் 2014 (09:36 IST)
மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு அனுமதியைப் புதுப்பித்ததில் முறைகேடுகள் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில், அன்புமணி ராமதாசுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

கடந்த 2004 ஆம் ஆண்டு மே மாதத்தில் இருந்து 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக அன்புமணி ராமதாஸ் பதவி வகித்தார்.

அப்போது, உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் உள்ள ரோகில்காண்ட் மருத்துவ கல்லூரியில் 2008-2009 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு அனுமதியை புதுப்பித்து வழங்கியதில், கல்லூரிக்கு சாதகமாக செயல்பட்டதாக அன்புமணி மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.

மேலும், மத்திய சுகாதார அமைச்சகத்தில் துணை செயலாளராக இருந்த கே.வி.எஸ்.ராவ், மருத்துவ கல்லூரியின் தலைவர் கேசவ குமார் அகர்வால், சப்தர்ஜங் மருத்துவமனை மருத்துவர்கள் விண்டு அமிதாப், சஞ்சீவ் குமார் ரசானியா ஆகியோரும் வழக்கில் சேர்க்கப்பட்டனர்.

இந்த வழக்கில், அன்புமணி உள்பட 5 பேர் மீதும், லக்னோவில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

மத்தியபிரதேசத்தில் உள்ள மருத்துவ கல்லூரிக்கு சாதகமாக செயல்பட்டதாக தன் மீது தொடரப்பட்ட மற்றொரு வழக்கு, டெல்லி பாட்டியாலா சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடந்து வருவதால், இந்த வழக்கையும் டெல்லிக்கு மாற்றுமாறு கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் அன்புமணி ராமதாஸ் மனு தாக்கல் செய்தார். அதை ஏற்று, இவ்வழக்கு டெல்லிக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் நீதிபதி மது ஜெயின் முன்பு விசாரணைக்கு வந்தது. அவர் அன்பு மணி உள்பட 5 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

உத்தரவில் நீதிபதி கூறி இருப்பதாவது:-

“சம்மனை பெற்றவுடன்,குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகி உள்ளனர். அவர்கள் நீதியின் பிடியில் இருந்து தப்பப்போவதில்லை. சாட்சியங்களை அழிப்பதற்கும் வாய்ப்புகள் இல்லை.

இந்த சூழ்நிலையில், 5 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்படுகிறார்கள். அவர்கள் தலா ரூ.1 லட்சம் தனிநபர் ஜாமீன், அதே தொகைக்கான தலா ஒருவரின் உத்தரவாதத்துடன் ஜாமீனை பெறலாம்.“ இவ்வாறு நீதிபதி கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்