'எனக்கோ, எனது குடும்பத்தினருக்கோ மதுபான ஆலைகள் கிடையாது' - டி.ஆர்.பாலு

புதன், 5 ஆகஸ்ட் 2015 (15:50 IST)
எனது பெயரிலோ எனது குடும்பத்தினர் பெயரிலோ எந்தவித மதுபான தொழிற்சாலைகளும் இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
 
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் தியாகி சசிபெருமாள் டவரில் ஏறி போராட்டம் நடத்தியபோது உயிரிழந்தார். இதனை தொடர்ந்து தமிழகத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகள் மூடக் கோரி பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
 
இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன் ஆகியோர் மது தொழிற்சாலைகள் நடத்தி வருவதாக புகார் கூறப்பட்டது. மேலும், இது தொடர்பாக ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருந்தன.
 
இதனை டி.ஆர்.பாலு முற்றிலும் மறுத்துள்ளார். இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன் ஆகியோர் திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரத்தில் இன்று சந்தித்தனர்.
 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர்.பாலு, ”மது விலக்கு அமல்படுத்த கோரி போராட்டம் நடந்து வரும் நேரத்தில் மது ஆலைகளை நாங்கள் நடத்துவதாக செய்தி வந்த வண்ணம் உள்ளது. கலைஞர் இது தொடர்பாக எங்களிடம் விளக்கம் கேட்டார். அவரிடம் உண்மை நிலவரத்தை விளக்கினோம்.
 
எனக்கு சொந்தமான மது ஆலைகள் எதுவும் இல்லை. எந்த மதுபான ஆலைகளிலும் நான் எந்த பொறுப்பையும், பங்கையும் வகிக்கவில்லை. எனது பெயரில் மது ஆலைகள் உள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகிறது. இது ஆதாரமற்றது.
 
எனது பெயரிலோ எனது குடும்பத்தினர் பெயரிலோ எந்தவித மதுபான தொழிற்சாலைகளும் இல்லை. எந்த மது தொழிற்சாலையிலும் எனக்கு பங்கு கிடையாது. எனவே மது ஆலை இருப்பதாக அவதூறான செய்திகளை வெளியிட வேண்டாம்.
 
எனது உறவினர் ஒரு சிலருக்கு பங்கு இருந்தால் தமிழக அரசு மது விலக்கை அமல்படுத்தும் போது உறவினர்கள் பங்கேற்றுள்ள ஆலையின் உரிமத்தை திருப்பி அளிக்க அவர்களிடம் வலியுறுத்துவேன்” என்று அவர் கூறினார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்