மௌலிவாக்கம் கட்டட விபத்து: முதலமைச்சரிடம் அறிக்கை அளித்தது ஒரு நபர் ஆணையம்

செவ்வாய், 26 ஆகஸ்ட் 2014 (08:50 IST)
சென்னை போரூரை அடுத்த மௌலிவாக்கத்தில் 11 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் விசாரணை அறிக்கையை ஒருநபர் ஆணையம் முதலமைச்சரிடம் சமர்ப்பித்தது.

ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் விசாரணை அறிக்கையை அளித்துள்ளது.

மௌலிவாக்கத்தில் ஜூன் 28 ஆம் தேதி 11 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து தரைமட்டமானதில் 61 பேர் உயிரிழந்தனர். இது குறித்து விசாரிக்க ஜூலை 3 ஆம் தேதி ஒரு நபர் ஆணையத்தை தமிழக அரசு நியமித்தது.

இந்நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து விசாரணை கமிஷன் அறிக்கையைத் தாக்கல் செய்தார்.

இந்த அறிக்கையின் அடிப்படையில், தமிழக அரசு கட்டிட விபத்துக்கு யார் காரணம் என்பது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படுகிறது.

முதலமைச்சரிடம் அளிக்கப்பட்ட, 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது குறித்து நடத்தப்பட்ட இந்த விசாரணை அறிக்கை மொத்தம் 523 பக்கங்களை கொண்டது என்று கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்