கோவையில் பிடிபட்ட மாவோயிஸ்டுகள்: பரபரப்பு வாக்குமூலம்

புதன், 6 மே 2015 (10:40 IST)
கோவை அருகே, கருமத்தம்பட்டி-அன்னூர் சாலையில் மாவோயிஸ்டு இயக்கத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


 

 
கோவை அருகே உள்ள கருமத்தம்பட்டி-அன்னூர் சாலையில் உள்ள ஒரு பேக்கரியில் நேற்று முன்தினம் மாலை மாவோயிஸ்டுகள் சிலர் டீ குடித்து கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
 
இதைத் தொடர்ந்து, உடனே அதிரடியாக கியூ பிரிவு காவல்துறை டி.ஐ.ஜி. ஈஸ்வரமூர்த்தி தலைமையிலான காவலர் படையினர் அங்கு விரைந்தனர். அவர்களை துப்பாக்கி முனையில் வளைத்து கைது செய்தனர்.
 
கைது செய்யப்பட்டவர்கள், கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் மல்லப்பள்ளியை சேர்ந்த ரூபேஷ், அவரது மனைவி சைனா, திருச்சூரை சேர்ந்த அனூப், மதுரையை சேர்ந்த கார்த்தி என்கிற கண்ணன் மற்றும் கடலூரை சேர்ந்த ஈஸ்வரன் என்கிற வீரமணி என்பது தெரியவந்தது.
 
இவர்களில் ரூபேஷ், ஒரு சட்ட பட்டதாரி; தகவல் தொழில் நுட்ப டிப்ளமோவும் படித்தவர். ஆந்திரா, கர்நாடகம், தமிழகம் மற்றும் கேரளா ஆகிய 4 மாநில மாவோயிஸ்டு தீவிரவாத இயக்கத்தின் தலைவர் என்று கூறப்படுகிறது.
இவர் "மாவோயிஸ்டு", "வசந்தத்திலே பூமரங்கள்" என்ற இரு நாவல்களை எழுதி வெளியிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறத.
 
இவரது மனைவி சைனா, கேரள உயர் நீதிமன்றத்தில் கிளார்க்காக வேலை பார்த்தவர். வேலையை ராஜினாமா செய்து விட்டு மாயமானவர். இவர் கணவர் ரூபேசுக்கு வலதுகரமாக செயல்பட்டு வந்திருக்கிறார். இவர்களுக்கு 2 மகள்கள். இவர்கள் தங்களது பாட்டியுடன் திரிச்சூர், வளப்பாடில் வசித்து வருகின்றனர்.
 
ரூபேஷ் 2002 ஆம் ஆண்டு காணாமல் போய் விட்டதாகவும், சைனா 2008 ஆம் ஆண்டு மாயமாகி விட்டதாகவும், அவர்களது மூத்த மகள் எமி கூறி உள்ளார். எனவே ரூபேஷ் 13 ஆண்டுகளும், சைனா 7 ஆண்டுகளும் மாவோயிஸ்டுகளாக தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
 
இது குறித்து, கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா கூறுகையில் "ரூபேசும், பிற 4 மாவோயிஸ்டுகளும் கைது செய்யப்பட்டிருப்பது முக்கிய திருப்புமுனை. இவர்களை கைது செய்ய கடந்த 2 மாதங்களாக ஆந்திரா, கர்நாடகம், கேரளா, தமிழ்நாடு காவல்துறையினர் தீவிர வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்" என்று கூறியுள்ளார. 
 
கைதான 5 பேரிடமும் கோவை பீளமேடு ஹட்கோ காலனியில் உள்ள மாவட்ட கியூ பிரிவு காவல்துறை அலுவலகத்தில் வைத்து விடிய, விடிய விசாரணை நடத்தப்பட்டது.
 
தமிழக கியூ பிரிவு டி.ஐ.ஜி. ஈஸ்வரமூர்த்தி, கோவை மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு சுதாகர், கோவை மாநகர துணை ஆணையர் பிரவேஷ்குமார், ஆந்திர மாநில நக்சலைட்டு எதிர்ப்பு பிரிவு காவல் சூப்பிரண்டு, கேரள மாநில நுண்ணறிவு பிரிவை சேர்ந்த அதிகாரிகள் சதானந்தா, வாகேஷ் ஆகிய 3 மாநில காவல்துறை உயர் அதிகாரிகள் அவர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர். 
 
அப்போது அவர்கள் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில் கூறியதாவது:-
 
தமிழகம், கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களில் 193 மலைக்கிராமங்கள் எங்கள் கட்டுப்பாட்டில் இருந்து வந்தன. எங்கள் இயக்கத்தினர் தினமும் ஒவ்வொரு மலைக்கிராமத்துக்கும் தலா 4 பேர்வீதம் சென்று, அங்குள்ள மக்களை சந்தித்து, அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த தூண்டினோம்.
 
மலைவாழ் மக்களுக்கு வழங்கிய நிலங்களை, நலத்திட்ட உதவிகளை அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் பறித்துக்கொண்டார்கள் என்று கூறி, அவர்கள் மத்தியில் போராட்ட உணர்வை தூண்டினோம்.
 
நீலகிரி மாவட்டத்தையொட்டிய கேரள ஆதிவாசி மக்களுக்கு எதிராக செயல்பட்டு வந்ததால், அந்த பகுதியில் உள்ள காவல் நிலையங்களை தகர்க்க சதித்திட்டம் தீட்டினோம். ஆதிவாசி மக்களை மூளைச்சலவை செய்து, எங்கள் ஆதரவாளர்களாக மாற்றினோம். 
 
அதேபோல, ஆந்திராவிலும், கர்நாடகத்திலும் எங்கள் இயக்கத்தினரை ஒழிக்க காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருவதால், அங்கு சென்றால் பிடிபட்டு விடுவோம் என்பதால், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்வதற்காகத்தான் கோவையை அடுத்த கருமத்தம்பட்டிக்கு வந்தோம்.
 
ஆந்திராவில் செம்மர கட்டைகள் கடத்தியதாக அப்பாவி தமிழர்கள் 20 பேரை ஆந்திர செம்மர கடத்தல் தடுப்பு படையினர் சுட்டுக்கொன்றதால், ஆந்திர காவல்துறையினர் மீது மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டோம். அதற்கான வியூகங்களை வகுக்கவும் திட்டமிட்டிருந்தோம். ஆனால் உங்களிடம் வசமாக மாட்டிக்கொண்டோம். இவ்வாறு அவர்கள் ஒப்புதல் வாக்குமூலத்தில் கூறியதாக கியூ பிரிவு காவல்துறை வட்டாரங்கள் கூறின.
 
முதல் கட்ட விசாரணையைத் தொடர்ந்து ரூபேஷ் உள்ளிட்ட 5 மாவோயிஸ்டுகளும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
 
அவர்களை அடுத்த மாதம் 3 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சுப்பிரமணியம் உத்தரவிட்டார். அதையடுத்து அவர்கள் 5 பேரையும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச்சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 
 
அவர்கள் 5 பேரையும் நீதிமன்ற அனுமதி பெற்று கேரளா, ஆந்திரா கொண்டு சென்று அடுத்த கட்ட விசாரணை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்