100க்கும் மேற்பட்டவர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த கால் டாக்ஸி பெண் உரிமையாளர் கைது

புதன், 4 மார்ச் 2015 (07:45 IST)
ரூ. 1 லட்சம் முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ. 5 ஆயிரம் தருவதாகக் கூறி 100க்கும் மேற்பட்டவர்களிடம், பல கோடி ரூபாய் மோசடி செய்த கால் டாக்ஸி நிறுவன பெண் உரிமையாளர் மற்றும், தொலைக்காட்சி நடனக் கலைஞர் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
சென்னை, முகலிவாக்கம் ஏ.ஜி.எஸ். காலனி 2 ஆவது அவென்யூவைச் சேர்ந்தவர் ஆ.வி. நர்மதா. அவருக்கு வயது  34. இவர் கோயம்பேடு பிருந்தாவன் நகர் முல்லை தெருவில் "இந்தியா டிராக் கால்டாக்ஸி' என்ற பெயரில் கால்டாக்ஸி நிறுவனம் நடத்தி வருகிறார்.
 
இவருக்கு உதவியாக பாரிமுனையைச் சேர்ந்த 24 வயதுடைய ப.பரத்குமார் இருந்துள்ளார். இந்நிலையில் நர்மதா, பரத்குமார் ஆகியோர் மீது சூளைமேடு வீரபாண்டிய ன்நகர் 2 ஆவது தெருவைச் சேர்ந்த வெங்கடகிருஷ்ணன் சென்னைப் பெருநகர காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவில் அண்மையில் ஒரு புகார் அளித்தார்.
 
அந்தப் புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-
 
சில மாதங்களுக்கு முன்பு 'இந்தியா டிராக் கால் டாக்ஸி' நிறுவனத்தில் இருந்து எனது செல்போனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. அதில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 36 மாதங்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதை படித்துப் பார்த்த நான், அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ. 5 ஆயிரம் கிடைக்கும் என நினைத்தேன்.
 
இதையடுத்து நான், எனது மனைவி அமுதா, உறவினர்கள், நண்பர்கள் என மொத்தம் 34 பேர் ரூ.34 லட்சம் முதலீடு செய்தோம். சில மாதங்களுக்கு மட்டும் எங்களுக்கு சரியாக பணம் வந்தது.
 
ஆனால் அதன் பின்னர் பணம் வரவில்லை. எங்களது பணத்தை கேட்டபோது, அவர்கள் முறையான பதில் அளிக்கவில்லை, பணத்தையும் தரவில்லை. இதனால் நாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்தோம்.
 
எனவே, எங்களது பணத்தை மீட்டுத்தர காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
 
இந்தப் புகார் குறித்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், நர்மதாவும், பரத்குமாரும் இணைந்து இவ்வாறு பலரிடம் பண மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
 
இதைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியானது. 
 
பட்டப்படிப்பு படித்துள்ள நர்மதாவின் சொந்த ஊர் வேலூர் மாவட்டம் முக்கூர். இவருடைய தந்தை இந்து அறநிலையத்துறையில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். நர்மதா முதலில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.
 
இந்நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு 170 கார்களுடன் கோயம்பேட்டில் 'இந்தியா டிராக் கால்டாக்ஸி' நிறுவனத்தை நர்மதா தொடங்கியுள்ளார்.
 
மேலும், குறைந்த முதலீட்டில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தைகள் கூறி, நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் கோடிக்கணக்கில் பண மோசடி செய்துள்ளார். இந்த மோசடிக்கு பரத்குமார் உடந்தையாக இருந்துள்ளார் என்பது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
இதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட இருவரும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
 
பரத்குமார், ஒரு நடனக் கலைஞர் என்பதும், அவர் ஒரு தனியார் தொலைக்காட்சி நடனப் போட்டியில் பங்கேற்றவர் என்றும் தெரிய வந்துள்ளதாக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்