ஏ.டி.எம். பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு: ரிசர்வ் வங்கிக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

செவ்வாய், 18 நவம்பர் 2014 (19:53 IST)
ஏ.டி.எம். பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு விதித்தது தொடர்பாக 2 வாரத்திற்குள் பதிலக்குமாறு ரிசர்வ் வங்கிக்கு, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 
கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏ.டி.எம்.களை ஒரு மாதத்தில் 5 முறை மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும் எனவும், மற்ற வங்கி ஏ.டி.எம்.களில் 3 முறை மட்டுமே பயன்படுத்த முடியும் எனவும் ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்தது.
 
அதற்கு மேல் பயன்படுத்தும் ஒவ்வொரு முறைக்கும் ரூ.20 கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடைமுறை கடந்த 1 ஆம் தேதி முதல் அமலில் உள்ளது.
 
இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் இந்த உத்தரவையடுத்து, மதுரையைச் சேர்ந்த தமிழரசன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ஏ.டி.எம். பயன்பாட்டில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் மக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது எனக் கூறியிருந்தார்.
 
இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிபதி, இதுகுறித்து 2 வாரத்திற்குள் பதிலளிக்குமாறு ரிசர்வ் வங்கிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்