ஆம்பூர் அருகே பாமக பிரமுகர் வெட்டிக்கொலை

புதன், 27 மே 2015 (19:15 IST)
முன்னாள் மாதனூர் ஒன்றிய பாமக செயலாளர் இன்று அதிகாலை ஆம்பூர் அருகே உள்ள பாலூர் கிராமத்தில் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் அந்தப்பகுதி மக்களும், அவரின் உறவினர்களும் மறியல் செய்து வருவதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
 
ஆம்பூர் அருகே உள்ள மாதனூர் – ஒடுக்கத்தூர் சாலையில் உள்ள பாலூர் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்க கவுண்டர் மகன் சின்னபையன் (வயது 45). முன்னாள் மாதனூர் ஒன்றிய பாமக செயலாளராக இருந்தார். அங்குள்ள மெயின்ரோடு அருகே விவசாயம் செய்து வருகிறார். மேலும் கோழிப்பண்ணையும் நடத்தி வருகிறார்.
 
நேற்று இரவு நிலத்துக்கு சென்ற சின்னபையன் வீடு திரும்பவில்லை. அவரை செல்போனில் தொடர்பு கொள்ள அவரது குடும்பத்தினர் முயற்சி செய்தனர். ஆனால் முடியவில்லை.
 
இந்த நிலையில் மாதனூர் – ஒடுக்கத்தூர் மெயின் ரோட்டில் உள்ள பாலத்தின் அருகே அப்பகுதியை சேர்ந்த ஒருவர் காலைக்கடன் கழிக்க சென்றார். அங்கு உடலில் வெட்டு காயங்களுடன் சின்னபையன் இறந்து கிடந்தார்.
 
இந்த தகவல் பாலூர் கிராமத்தில் வேகமாக பரவியது. சின்னபையன் உறவினர்கள் சம்பவ இடத்தில் குவிந்தனர்.
 
அவர்கள் சின்னபையன் பிணத்துடன் மாதனூர் – ஒடுக்கத்தூர் மெயின் ரோட்டில் சாலை மறியல் செய்தனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 
பாமக பிரமுகர் கொலை செய்யப்பட்ட தகவலறிந்து அப்பகுதியை சேர்ந்த சில பாமக பிரமுகர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
 
சாலையில் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கொலைக் குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டுமென கோஷம் எழுப்பினர்.
 
ஆம்பூர் டி.எஸ்.பி. கணேசன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு ரவிச்சந்திரன் மற்றும் வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
 
சின்னபையனின் தலை, கை உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுக்காயங்கள் இருந்தன. இன்று அதிகாலையில் தான் கொலை நடந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
 
சின்னபையன் நடமாட்டத்தை கண்காணித்து திட்டமிட்டு கொலை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். கொலைக்கான காரணம் தெரியவில்லை. முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
 
சின்னபையனுக்கு அதே பகுதியை சேர்ந்த 2 பேர் எதிரியாக இருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இது சம்பந்தமாக போலீசார் முதற்கட்ட விசாரணையில் இறங்கியுள்ளனர். நேற்று இரவு வீட்டில் இருந்த சின்னபையனை அவரது நண்பர் ஒருவர் வெளியே அழைத்து சென்றுள்ளார். அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
 
போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் சமாதானம் அடையாத பொதுமக்கள் தொடர்ந்து சாலைமறியல் செய்தனர். 2 மணி நேரத்துக்கு மேலாக மறியல் நீடித்தது. அவர்களிடம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
 
பாமக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டம் நிலவியது.

வெப்துனியாவைப் படிக்கவும்