மு.க.அழகிரி மேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்

புதன், 17 டிசம்பர் 2014 (08:55 IST)
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது வல்லடிகாரர் கோவில். கடந்த 2011 சட்டமன்ற தேர்தலின் போது அப்போதைய மத்திய அமைச்சராக இருந்த மு.க.அழகிரி, முன்னாள் மதுரை துணை மேயர் மன்னன் உட்பட திமுகவினர் தேர்தல் விதிமுறைகளை மீறி வல்லடிகாரர் கோவிலுக்குள் செல்வதாக தகவல் கிடைத்தது. 
 
இதைத்தொடர்ந்து, தேர்தல் அதிகாரியும், அப்போதைய மேலூர் தாசில்தாருமான காளிமுத்து அங்கு சென்றார். அங்கு தாசில்தார் காளிமுத்துவுக்கும், திமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்து தாசில்தார் காளிமுத்து கீழவளவு காவல் நிலையத்தில் புகார் செய்தார். 
 
அதில் தன்னை தாக்கி, அரசு பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார் செய்தார். கீழவளவு காவல்துறையினர் இது தொடர்பாக மு.க.அழகிரி, மன்னன், மேலூர் ஒன்றிய செயலாளர் ரெகுபதி, வெள்ளையன் உட்பட 21 பேர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். 
 
இந்த வழக்கின் மீதான விசாரணை மேலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மு.க.அழகிரி நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். 
 
அப்போது, நீதிபதி மகேந்திரபூபதி, அழகிரியிடம் ‘உங்கள் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் 147, 353, 332, 149 ஆகியவற்றின் கீழ் காவல்துறையினர் குற்றம் சுமத்தியுள்ளனர். இது குறித்து உங்கள் பதில் என்ன?’ என்று கேட்டார். அதற்கு, “காவல்துறையினர் என் மீது பொய்யான வழக்குகள் போட்டுள்ளனர்” என அழகிரி தெரிவித்தார். 
 
இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி மகேந்திரபூபதி வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (ஜனவரி) 9 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்