வெட்டிக் கொல்லப்பட்ட சங்கரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்: காவல்துறையினர் தடியடி

செவ்வாய், 15 மார்ச் 2016 (09:33 IST)
உடுமலை பேட்டையில் வெட்டிக் கொல்லப்பட்ட இளைஞரின் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்திய உறவினர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.


 

 
காதல் திருமணம் செய்து கொண்ட காதல் தம்பதியினரை ஜாதி வெறி கும்பல் உடுமலை பழைய பேருந்து நிலையம் அருகே வெட்டியதில் சங்கர், கௌசல்யா இருவரும் வெட்டுபட்டனர்.
 
இதில், பலத்த காயமடைந்த சங்கர் உயிரிழந்தார். கௌசல்யாவுக்கு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில், சங்கரின் சடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.
 
சங்கரின் பிரேதத்தைப் பரிசோதனை செய்ய அவரது தந்தை வேலுசாமி கையெழுத்திட மறுப்பு தெரிவித்தார்.
 
அத்துடன், கொலைக்கு காரணமான கௌசல்யாவின் குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி மருத்துவமனை வளாகத்தில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்க முயன்றனர். ஆனால் அவரது உடலை வாங்க உறவினர்கள் மறுத்தனர்.
 
இந்நிலையில், சங்கரின் படுகொலையைக் கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தியும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, சமூக நீதிக் கட்சி, சமத்துவ மக்கள் கழகம், இடதுசாரிக் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கோவை அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 
இதைத் தொடர்ந்து, காவல்துறையினர் சங்கரின் உடலை பெற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்தி வந்தனர். அப்போது, இரு தப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதைத் தொடந்து காவல்துறையினர் தடியடி நடத்தினர்.
 
முன்னதாக, கௌசல்யாவின் தந்தை சின்னசாமி நிலக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி ரிசானா பர்வீன் முன்னிலையில் சரணடைந்தார். அவரை 15 நாள்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்