கடத்திச் சென்று மொட்டை அடிக்கப்பட்டதாக நாடகமாடிய மாணவி

புதன், 25 பிப்ரவரி 2015 (16:20 IST)
கோயம்புத்தூரில் பள்ளி மாணவி ஒருவர், பிரிந்து சென்ற தனது காதலனின் கவனத்தை ஈர்ப்பதற்காக, ஒரு மர்ம கும்பல் தன்னை கடத்திச் சென்று, தலையை மொட்டை அடித்ததாக கூறி நாடகமாடியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
கோயம்புத்தூர் மாவட்டம், சிறுவாணி சாலையைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் மகள், தன்னை யாரோ கடத்திச் சென்று மொட்டையடித்து, கைகால்களைக் கட்டிப்போட்டு விட்டதாகக் கூறினார்.
 
அதனை அங்கே இருந்த சிறுவன் ஒரு பார்த்து, காவல்துறைக்குத் தகவல் கொடுத்ததாகவும் செய்திகள் வெளியாயின.
 
இது குறித்து, மாணவிமீது சந்தேகம் அடைந்த காவல்துறையினர், அந்த மாணவியிடமும், காவல்துறைக்கு போன் செய்த சிறுவனிடமும் விசாரணை நடத்தினர், இந்த விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்தனர்.
 
இதைத் தொடர்ந்து, காவல்துறையினர் நடத்திய தொடர் விசாரணையில், அவர்கள் உண்மையை ஒப்புக் கொண்டனர்.
 
அந்த மாணவி, தன்னிடம் ஒரு ரூபாய் கொடுத்து காவல்நிலையத்துக்குப் போன் செய்யச் சொன்னதாக சிறுவன் உண்மையைக் கூறினான்.
 
இதையடுத்து மாணவியிடம் நடத்திய விசாரணையில், தன்னை ஒரு இளைஞர் காதலித்ததாகவும், இந்த விஷயம் குடும்பத்தினருக்குத் தெரியவந்ததால், அவர் தன்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டதாகவும் கூறினார்.
 
இந்நிலையில், தனது அந்த காதலனின், கவனத்தை தன்மீது ஈர்ப்பதற்காகவே இப்படி ஒரு கடத்தல் நாடகம் ஆடியதாகக் கூறினார்.
 
இதையடுத்து, மாணவியின் எதிர்கால நலன் கருதி, காவல்துறையினர் அந்த மாணவியிடம், இதுபோன்ற செயலில் இனி ஈடுபட மாட்டேன் என்று எழுதி வாங்கிக் கொண்டு, அறிவுரை கூறி அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்