உள்ளாட்சி அமைப்புகளில் நடக்கும் முறைகேடுகளை விசாரிக்க நடுநிலையாளர்: அவசரச் சட்டம்

வெள்ளி, 21 நவம்பர் 2014 (08:45 IST)
தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் நடக்கும் ஊழல்களை விசாரிப்பதற்கு நடுநிலையாளரை நியமித்து ஆளுநர் கே. ரோசய்யா அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளார்.
 
இது குறித்து தமிழக ஆளுநர் ரோசய்யா பிறப்பித்துள்ள அவசரச் சட்டத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:–
 
இந்த அவசரச் சட்டம், தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் நடுநிலையாளர் அவசரச் சட்டம் 2014 என்று அழைக்கப்படும். உடனடியாக இந்த அவசரச் சட்டம் அமலுக்கு வருகிறது.
 
தமிழகத்தில் உள்ள மாநகராட்சி,. நகராட்சி, பேரூராட்சி போன்ற ஊராட்சி தவிர மற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநில அளவில் விசாரணை அதிகாரி ஒருவரை அமர்த்துவது அவசியமாகிறது.
 
அதன் அதிகாரிகள், ஊழியர்கள், மேயர், துணை மேயர், தலைவர்கள் உட்பட பிரதிநிதிகள் மீது எழும் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக, இந்த அவசரச் சட்டம் மூலம் நடுநிலையாளர் நியமிக்கப்படுவார்.
 
முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் முதன்மைச் செயலாளர் நிலைக்கு குறையாத அதிகாரி ஒருவர், நடுநிலையாளராக ஆளுநரால் நியமிக்கப்படுவார். இந்த நடுநிலையாளர் 3 ஆண்டுகளுக்குப் பணியாற்றுவார்.
 
இடைக்காலத்தில் அவர் விலக நேரிட்டால், அவர் தனது ராஜினாமா கடிதத்தை எழுத்து மூலம் ஆளுநரிடம் அளித்துவிடலாம். தகுதியின்மை அல்லது முறைகேடு போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தால், அவரை பணிநீக்கம் செய்வது குறித்து சட்டசபையில் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் தீர்மானம் நிறைவேற்றிய பிறகு, அதன் அடிப்படையில் நடுநிலையாளரை ஆளுநர் நீக்க உத்தரவிடலாம்.
 
எழுத்து மூலம் அரசு புகார் அளித்தாலோ அல்லது, உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பிரதிநிதிகளின் தவறான நிர்வாகம், ஊழல் முறைகேடுகள் பற்றிய தகவல் அளிக்கப்பட்டாலோ, விசாரணையை அந்த நடுநிலையாளர் மேற்கொள்ளலாம்.
 
ஊழியர் ஒருவர் செய்திருக்கும் முறைகேடு கிரிமினல் குற்றமாக இருந்தால் அதை சம்பந்தப்பட்ட விசாரணை முகமைக்கு நடுநிலையாளர் அனுப்பலாம்.
 
உள்ளாட்சி அமைப்பின் ஊழியர் அல்லது அதிகாரிகள் வேண்டுமென்றே கடமை தவறும் பட்சத்தில், அவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் துறை ரீதியான விசாரணை நடத்த பரிந்துரைக்கலாம்.
 
தவறான செயல்பாட்டின் காரணமாக உள்ளாட்சி அமைப்புக்கு நிதி இழப்பு நேரிட்டிருந்தால், அந்த ஒழுங்கீனத்துக்குக் காரணமான நபரிடம் இருந்து அதை திரும்ப வசூலிப்பதற்கு அவர் உத்தரவிடலாம்.
 
சிவில் வழக்கு விசாரணை சட்டத்தின் (சி.பி.சி.) அடிப்படையில் வழக்குகளை விசாரிக்கும் சிவில் கோர்ட்டுக்கு உள்ள அனைத்து அதிகாரமும் நடுநிலையாளருக்கு உண்டு.
 
குற்றச்சாட்டை கூறும் புகார்தாரர் மற்றும் சாட்சிகளை சம்மன் அளித்து விசாரணைக்கு வரவழைக்கவும், சத்தியப் பிரமாணம் செய்த பிறகு சாட்சி அளிக்கவும் உத்தரவிடலாம்.
 
தேவையான ஆவணங்களைக் கோரலாம். சாட்சியங்களை எழுத்து மூலம் பெறலாம். நீதிமன்றங்கள், அரசு அலுவலகங்களில் இருந்து பொது ஆவணங்களை கேட்டுப் பெறலாம். குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்றால் குற்றம்சாட்டப்பட்டவருக்கு நிவாரணத் தொகையை வழங்க புகார்தாரருக்கு உத்தரவிடலாம்.
 
முறைகேட்டின் மூலம் உள்ளாட்சி அமைப்புக்கு இழப்பு ஏற்படுத்தியவர்களுக்கு, அதை திருப்பிக் கொடுக்க உத்தரவிட்டும், குறித்த காலத்தில் அவர் அதை திருப்பிச் செலுத்தாவிட்டால், தமிழ்நாடு வருவாய் மீட்புச் சட்டத்தின்கீழ் அந்தத் தொகையை பெறலாம்.
 
நடுநிலையாளரின் விசாரணைக்கு உதவியாக அவர் கேட்டுக் கொண்டால், காவல் துறையினர், அரசு ஊழியர்களை அவருக்காக அரசு நியமித்துக் கொள்ளலாம். முறைகேடு நிகழ்வு நடந்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு தாக்கல் செய்யப்படும் புகார்களை நடுநிலையாளர் விசாரிக்கத் தேவையில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்