கடன் வாங்குவதில் இந்தியாவிலேயே தமிழகத்தை முதல் இடத்துக்குக் கொண்டு வந்துள்ளது அதிமுக: மு.க.ஸ்டாலின்

திங்கள், 30 நவம்பர் 2015 (09:42 IST)
ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த 4½ ஆண்டுகளில், கடன் வாங்குவதில் இந்தியாவிலேயே தமிழகத்தை முதல் இடத்துக்குக் கொண்டு வந்த சாதனையை அதிமுக அரசு நிகழ்த்தி இருக்கிறது என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.


 

 
இது குறித்து மு.க. ஸ்டாலின்  முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- 
 
ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த 4½ ஆண்டுகளில், கடன் வாங்குவதில் இந்தியாவிலேயே தமிழகத்தை முதல் இடத்துக்குக் கொண்டு வந்த சாதனையை அதிமுக அரசு நிகழ்த்தி இருக்கிறது.
 
மின்சார கட்டணம், பஸ் கட்டணம், பால் விலை போன்றவற்றை கடுமையாக உயர்த்தி, மக்களின் தலையில் பல ஆயிரம் கோடி ரூபாயை சுமத்திய பிறகும்கூட அதிமுக அரசால் நிதிநிலையைச் சமாளிக்க முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
 
உலக அளவில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்த போதும், கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் (2006-2011) மக்கள் நலனுக்காகவும் கட்டமைப்பு வசதிகளைப் பெருக்குவதற்காகவும் செலவிடத் தயங்கவில்லை.
 
அத்தியாவசியத் தேவைகளுக்காக, மத்திய அரசும் சட்டமும் நிர்ணயித்த வரம்புக்குள் திமுக ஆட்சியில் கடன் வாங்கிய காலங்களில் அதை அதிமுக கடுமையாக விமர்சித்தது. எள்ளி நகையாடியது.
 
திமுக ஆட்சியை விட்டு விலகிய காலத்தில், அதாவது 2009-10 ஆம் நிதியாண்டில் மாநிலத்தில் கடன்சுமை ரூ.99,180 கோடியாக இருந்தது.
 
உலகப் பொருளாதாரம் மந்த நிலையில் இருக்கும்போது, மாநிலத்தில் செலவீனங்களை அதிகரிக்க கடன் வாங்குவது இன்றியமையாதது என்பதையும், கடன் வாங்கி மெட்ரோ ரயில், மருத்துவ கல்லூரிகள், மேம்பாலங்கள், கூட்டு குடிநீர் திட்டங்கள், பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம், கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள், புதிய தலைமைச்செயலகம், தொழில் நுட்ப பூங்காக்கள் என பல்வேறு உட்கட்டமைப்பு மற்றும் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றியதையும் தமிழக மக்கள் மறக்கமாட்டார்கள்.
 
அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழகத்தின் கடன் சுமையானது 2014-15 ஆம் ஆண்டின் இறுதியில், 1,95,300 கோடியாக உயர்ந்திருக்கிறது.
 
2010 க்கும் 2015 க்கும் இடையிலான ஐந்தாண்டுகளில் கடன் வாங்கும் விகிதம் 92 சதவீத அளவுக்கு உயர்ந்திருப்பதாகவும், வேறெந்த மாநிலமும் இந்த அளவுக்கு கடன் வாங்கும் நெருக்கடியில் சிக்கிக்கொள்ளவில்லை என்றும் இந்தியாஸ்பெண்ட் என்ற பொருளாதார ஆய்விதழ் அதிர்ச்சியான விவரங்களை விரிவாக வெளியிட்டிருக்கிறது.
 
அதிமுக அரசு தாக்கல் செய்த 2015-16 க்கு உரிய நிதிநிலை அறிக்கையிலேயே 31-3-2016 அன்று தமிழகத்தின் கடன் 2,11,483 கோடியாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.
 
அதாவது, தமிழகத்தின் குடிமக்களில் ஒவ்வொருவர் மீதும் சராசரியாக ரூ.28,778 கடன் சுமை இப்போதே ஏற்றப்பட்டிருக்கிறது.
 
இந்த அளவுக்கு கடன் வாங்கி அதிமுக அரசு செயல்படுத்திய மாபெரும் திட்டங்கள் என்ன என்பதை விளக்குவதற்கு தமிழக அரசு கடமைப்பட்டிருக்கிறது.
 
ஆனால், முதலமைச்சர் ஜெயலலிதாவோ இதைப்பற்றி எல்லாம் கவலைப்படுவதாகவே தெரியவில்லை என்பதுதான் தமிழகத்தின் துயரம்.  இவ்வாறு அந்த அறிக்கையில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்