அமெரிக்க தூதுரகத்தில் வைகோவிற்கு அவமரியாதை: திருமாவளவன் குற்றச்சாட்டு

புதன், 2 செப்டம்பர் 2015 (01:07 IST)
சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதுரகத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவமரியாதை செய்யப்பட்டுள்ளார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். 
 

 
இது குறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் துரோகம் இழைப்பது போல் உள்நாட்டு விசாரணையே போதும் என்று அறிவித்துள்ள அமெரிக்காவின் போக்கை கண்டித்து, எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சியினரும் சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரைச் சந்தித்து முறையிட்டு வருகின்றனர்.
 
மதிமுக பொதுச் செயலாளரும், உலகறிந்த தலைவர்களில் ஒருவருமான வைகோ, அமெரிக்க  துணைத் தூதரைச் சந்திக்க முன்கூட்டிய அனுமதி பெற்றிருந்தார்.  அதன் அடிப்படையில் அவரைச் சந்திக்கச் செல்லும் போது அமெரிக்கத் துணைத் தூதர், அலுவலகத்தில் இருந்து கொண்டே வைகோவை சந்திக்காமல் அவமதித்துள்ளார்.
 
தனது ஆலோசகர் ஒருவர் மூலமாக வைகோவின் மனுவைப் பெறச் செய்திருக்கிறார். இந்தச் செயல் வைகோவுக்கான அவமதிப்பு மட்டுமல்ல, ஒட்மொத்தத் தமிழர்களையே அவமதித்ததாகத்தான் பொருள்படும். இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
 
இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டைச் சார்ந்த 16 மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்து இழுத்துச்சென்றுள்ளது. இலங்கையில் தேர்தல் முடிந்து தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் என்று சிங்கள ஆட்சியாளர்கள் வாக்குறுதி அளித்தார்கள்.
 
ஆனால் இப்போதும் அவர்கள் பேரினவாதப் பாதையிலேயே பயணத்தைத் தொடர்கிறார்கள். ஈழத் தமிழர்களுக்கு இப்போது ஆதரவுக் குரல் எழுப்பவேண்டியது தாய்த் தமிழ்நாட்டின் தலையாயக் கடமையாகும். அந்தக் குரலை நசுக்குவதற்குத்தான் சிங்களப் பேரினவாத அரசும், அமெரிக்க வல்லரசும் இன்று கூட்டணி அமைத்திருக்கின்றன.
 
வைகோவை அவமதித்த அமெரிக்கத் துணைத் தூதரின் நடவடிக்கையும், தமிழக மீனவர்களைக் கைது செய்துள்ள இலங்கைக் கடற்படையினரின் நடவடிக்கையும் அமெரிக்க இலங்கை கூட்டணியின் அடையாளமேயாகும். இது ஈழத் தமிழர்களுக்கு மட்டுமின்றி இந்தியாவிற்கே அச்சுறுத்தலான ஒன்றுதான் என்பதை இந்திய அரசு புரிந்து கொள்ளவேண்டும்.
 
இலங்கைக் கடற்படை பிடித்துச்சென்ற தமிழக மீனவர்களை விடுவிக்கவும், வைகோவை அவமதித்த அமெரிக்கத் துணைத் தூதருக்குத் தனது கண்டனத்தைத் தெரிவிக்கவும் இந்திய அரசு முன்வரவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்