கொடைக்கானல் மலை கிராமங்களில் சிறுத்தை நடமாட்டம்: மக்கள் பீதி

புதன், 23 ஜூலை 2014 (18:57 IST)
கொடைக்கானல் அருகே மலை கிராமங்களை ஒட்டி உள்ள தோட்டங்களில் சிறுத்தைகள் சர்வ சாதாரணமாக நடமாடுகின்றன. ஆடு, நாய்களை வேட்டையாடி வருவதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். 
 
கொடைக்கானல் அருகே அடுக்கம், சாம்பக்காடு, தாமரைக்குளம், பாலமலை உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் வாழை, ஆரஞ்சு, காபி உள்ளிட்ட பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. 
 
சமீப காலமாக இப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. கடந்த மாதம் அடுக்கத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான 3 ஆடுகளை சிறுத்தை இழுத்து சென்றது. அதேபோல் தாமரைக்குளத்தில் பத்துக்கும் மேற்பட்ட ஆடுகள், சிறுத்தைகளுக்கு பலியாகி உள்ளன. அடுக்கம் கிராமத்தில் தோட்டத்தில் வசிக்கும் மகேஸ்வரி என்பவரின் நாயை நேற்று முன்தினம் இரவு சிறுத்தை இழுத்து சென்றது. அன்று பகலில் 2 குட்டிகளுடன் சிறுத்தை சென்றதை கிராம மக்களில் சிலர் பார்த்துள்ளனர். 
 
முன்பு இரவில் மட்டும் இப்பகுதியில் நடமாடிய சிறுத்தை, தற்போது பகலிலும் சர்வ சாதாரணமாக நடமாடி வருவதால் விவசாயிகள் தோட்ட வேலைக்கு செல்லாமல் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர். மகேஸ்வரி கூறுகையில், ‘இப்பகுதியில் ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட ஆடுகள், சிறுத்தைகளுக்கு இரையாகி விட்டன. வனத்துறையினரிடம் புகார் செய்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த வாரம் எனது 2 நாய்களை சிறுத்தை கொன்று விட்டது. 
 
நேற்று முன்தினம் இரவு மற்றொரு நாயை இழுத்து சென்றது. இதனால் பயத்துடன் வசித்து வருகிறோம் என்றார். வனச்சரகர் நாகையா கூறுகையில், அடுக்கம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் குறித்து கிராம மக்கள் புகாரோ, தகவலோ அளிக்கவில்லை. சிறுத்தை நடமாடினால் அதனை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்