ஸ்ரீரங்கம் தொகுதியை காலியானதாக அறிவிக்க வேண்டும்: தலைமை தேர்தல் ஆணையரிடம் மனு

புதன், 29 அக்டோபர் 2014 (19:56 IST)
தமிழகத்தில் உள்ள ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியை காலியானதாக அறிவிக்க வேண்டும் என்று கோரி வழக்கறிஞர்கள் தலைமைத் தேர்தல் ஆணையரிடம்  மனு அளித்துள்ளனர்.
 
டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத்தை உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் கிருஷ்ண மூர்த்தி, ராஜாராமன் ஆகியோர் சந்தித்து ஒரு மனுக் கொடுத்துள்ளனர்.
 
அந்த மனுவில், "சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தால் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதா முதல்வர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்துள்ளார்.
 
ஆனால் அவர் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியை காலியானதாக இதுவரை அறிவிக்காமல் தமிழக சட்டமன்றச் செயலாளர் ஜமாலுதீன் காலம் தாழ்த்தி வருகிறார்.
 
ஜெயலலிதா பதவி இழந்து 1 மாதம் ஆகிவிட்ட நிலையில் அங்கு உடனடியாக இடைத்தேர்தலை நடத்த தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம்  மேற்கொள்ள வேண்டும்.
 
ஏற்கனவே உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் ஊழல் மற்றும் குற்ற வழக்குகளில் 2 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை பெற்ற எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மீது தீர்ப்பு வெளியானதில் இருந்து 15 நாட்களுக்குள் அந்த தொகுதியை காலியானதாக அறிவிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற செயலகம் மற்றும் அனைத்து மாநில சட்டமன்ற செயலகத்திற்கும் ஏற்கனவே தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
 
எனவே இந்த நடைமுறையை தமிழ்நாட்டில் அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்