மதுரையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் - காவல்துறையினர் மோதல்

செவ்வாய், 12 ஏப்ரல் 2016 (08:24 IST)
மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள் ஊர்வலம் செல்லவதைத் தடுத்தால், காவல்துறையினருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும், சட்டக் கல்லூரி மாணவர்கள் 16 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.


 


 
அம்பேத்கர் பிறந்தநாள் விழா ஏப்ரல் 14 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மதுரை அரசு சட்டக்கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் தரப்பில் கல்லூரியின் வாசலில் அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
 
இந்த நிகழ்ச்சியின் முடிவில், மாணவர்கள் அனைவரும் ஊர்வலமாக சென்று அவுட்போஸ்ட் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்போவதாக தெரிவித்தனர்.
 
ஆனால்,இந்த  ஊர்வலத்திற்கு காவல்துறையினர் அனுமதி தர மறுத்தனர். அத்துடன் அங்கு ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
 
தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால், ஊர்வலம் செல்ல அனுமதிக்க முடியாது என்று காவல்துறையினர் உறுதிபட தெரிவித்தனர்.
 
ஆனாலும் மாணவர்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்தனர். இதனால் காவல்துறையினருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 
 
அதைத் தொடர்ந்து, அங்கிருந்த மாணவர்கள் 16 பேரை காவல்துறையினர் கைது செய்து வேனில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்