ஜெயலலிதாவுடனான கடைசி சந்திப்பு - சுப்பிரமணிய சாமி விளக்கம்

வெள்ளி, 16 டிசம்பர் 2016 (12:52 IST)
கொடநாட்டில் பேசியதுதான் நான் அவருடன் நடத்திய கடைசி சந்திப்பு ஆகும். ஆனால், நிச்சயமாக இதற்கு நான் அவர் மீது தொடுத்த வழக்கு காரணமாக இருக்காது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி பேட்டியளித்து உள்ளார்.


 

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி ’தி இந்து’ பத்திரிக்கைக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், ஜெயலலிதா இறப்பில் மர்மம் இருப்பதாக கூறுவது பற்றி கருத்து கேட்கப்பட்டதற்கு, “மர்மம் இருப்பதால் தான் யாரையும் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. இது குறித்து ஒரு நல்ல விசாரணை நடத்தப்படும் வரையில் அது குறித்து பல கேள்விகள் தொடரும்.

சிகிச்சைக்காக 75 நாட்கள் இருந்தபோது, செவிலியர்களிடம் அவர் பேசியதாக சொல்லப்படுகிறது. இது உண்மையென்றால் அவரது குரலை கட்சி தொண்டர்களுக்காக பதிவு செய்திருக்கலாமே. அமெரிக்க மருத்துவமனையில் எம்.ஜி.ஆர் இருந்தபோது செய்ததுபோல், வீடியோ பதிவு கூட வெளியிட்டிருக்கலாம்.

இதுபோல், அங்கு நடந்த தவறுகளை விசாரித்து, அதற்கான ஆதாரங்களை திரட்டிக் கொண்டிருக்கிறேன். எனக்கு அப்பல்லோ, தமிழக போலீஸ் அதிகாரிகள் என பலதரப்பினரின் தொடர்பு உண்டு. இவர்களிடம் கிடைக்கும் ஆதாரத்தில் மர்மம் விலகாவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன்” என்று கூறியுள்ளார்.

மேலும், இந்த அளவுக்கு நெருக்கமாக இருந்த உங்கள் இருவரின் நட்பில் விரிசல் ஏற்பட காரணம்? என்ற கேள்விக்கு, “இந்த கேள்விக்கான பதில் எனக்கும் இன்றுவரை தெரியவில்லை. வெளியில் எங்காவது பார்த்தால் நல்ல முறையில் பேசுவார். என்னை கொடநாடு எஸ்டேட்டுக்கு காலை உணவுக்கு அழைத்தார். அப்போது அத்வானிக்காக நான் அவரிடம் பேசினேன். இதற்கு அவர்

‘பாஜகவை விட தன்னிடம் இந்து வாக்குகள் அதிகம் உள்ளன. அவருக்காக நான் எதையும் செய்யத் தேவையில்லை’ என மறுத்து விட்டார். தமிழகத்தில் அதிமுகவிடம் இந்து வாக்குகள் அதிகம் உள்ளன என்பது உண்மை தான். கொடநாட்டில் பேசியதுதான் நான் அவருடன் நடத்திய கடைசி சந்திப்பு ஆகும். ஆனால், நிச்சயமாக இதற்கு நான் அவர் மீது தொடுத்த வழக்கு காரணமாக இருக்காது. ஏனெனில். இதை அறிந்த பின் தான் அவர் என்னிடம் கூட்டணியும் வைத்தார்” என்று கூறியுள்ளார்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்