நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு பட்டா வழங்க உத்தரவிட முடியாது: உயர் நீதிமன்றம்

சனி, 28 நவம்பர் 2015 (08:01 IST)
ஏரி, குளம் உள்ளிடட்ட நீர்நிலைகள் நீண்ட காலமாக பயன்பாட்டில் இல்லாததால், அங்கு ஆக்கிரமித்துள்ள இடங்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


 

 
டி.கே.சண்முகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.
 
அந்த மனுவில், கொரட்டூர் ஏரிப் பகுதியில் ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு 2006 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணைப்படி பட்டா வழங்கி, ஆக்கிரமிப்புகளை முறைப்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
 
இந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்னர் விசாரணைக்கு வந்தது.
 
இது குறித்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ஏரி, குளம் உள்ளிடட்ட நீர்நிலைகள் நீண்ட காலமாக பயன்பாட்டில் இல்லை என்பதால், அங்கு ஆக்கிரமித்துள்ள இடங்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட முடியாது என்று கூறினர்.
 
சமீபத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெய்த கனமழை காரணமாக மழை வெள்ளம் குடியிருப்புகளுக்குள் புகுந்தது. இந்த துயர நிலைக்கு ஆக்கிரமிப்புகளை முதன்மை காரணம் என்று பல்வேறு தரப்பினரும் குற்றம் சாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்