குஷ்பு தனது ட்விட்டர் பதிவில், மறைந்த எம்பி வசந்தகுமார் படத் திறப்பு விழா நடக்கிறது என எனக்கு யாரும் சொல்லவில்லை. நான் பத்திரிகைகளை பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன். இத்தனைக்கும் நான்தான் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் உள்ள ஒரே தேசிய செய்தி தொடர்பாளர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எப்போதுதான் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் ஒற்றுமையை உருவாக்கி, நம்மை வலிமையாக்குவோம் என எனக்குத் தெரியவில்லை. நாம் நமது ஈகோ போன்ற விஷயங்களால் பலவீனமாகிவிடக் கூடாது என பதிவிட்டுள்ளார். இதன் மூலம் குஷ்பூவை தமிழக காங்கிரஸ் கட்சியினர் இதுக்குவது அம்பலமாகியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் முன்னாள் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்த குஷ்பூ, திமுகவில் அவர் படிப்படியாக முன்னேறிக் கொண்டிருந்தபோது திடீரென முக ஸ்டாலின் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை கூறியதால் திமுகவிலிருந்து வெளியேறினார்.
அதன் பின்னர் அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். ராகுல் காந்தியின் மிகவும் நம்பிக்கைக்குரிய தலைவராக மாறிய குஷ்பு, சமூக வலைதளங்களிலும் பாஜகவின் கொள்கைகளையும் திட்டங்களையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். சமீபத்தில் பாஜக அரசு கொண்டு வர இருக்கும் புதிய கல்வி கொள்கையை ஆதரித்து கட்சிக்குள் சர்ச்சையில் சிக்கினார்.