கொரோனாவை மறந்து கொண்டாட்டம் போட்ட திமுக பிரமுகர்: போலீஸார் வழக்குப்பதிவு!

செவ்வாய், 23 ஜூன் 2020 (08:41 IST)
கும்மிடிப்பூண்டி பகுதியில் கொரோனா பொதுமுடக்க விதிகளை மீறி கூட்டம் கூட்டி பிறந்தநாள் கொண்டாடிய திமுக ஒன்றிய துணை சேர்மன் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகமுள்ளதாம் முழுமுடக்கம் அமலுக்கு வந்த மாவட்டங்களில் திருவள்ளூர் மாவட்டமும் ஒன்று. கடந்த 19ம் தேதி முதல் அங்கு முழுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதே நாளில் பொதுமுடக்க விதிகளை மீறி பிறந்தநாள் கொண்டாடியுள்ளார் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய துணை சேர்மன் குணசேகரன்.

ஊராட்சி ஒன்றிய துணை தலைவராகவும், திமுக பொதுக்குழு உறுப்பினராகவும் உள்ள இவர் கடந்த 19ம் தேதி தனது 50வது பிறந்தநாளை மாதர்பாக்கம் அருகே உள்ள மாந்தோப்பு ஒன்றில் கொண்டாடியுள்ளார். இதில் திமுக தொண்டர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் குணசேகரனின் நட்பு வட்டாரங்கள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாகவும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் குணசேகரன் நடத்திய விருந்தில் கலந்து கொண்ட அரசு அதிகாரிகள் 5 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் குணசேகரன் மற்றும் அவருடன் இருந்த சிலர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குணசேகரன் உள்ளிட்ட 15 பேருக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கும் நிலையில் குணசேகரன் தலைமறைவாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் கும்மிடிபூண்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்