கை தட்டியாச்சு, விளக்கு ஏத்தியாச்சு.. இன்னும் என்ன? அழகிரி காட்டம்!!

சனி, 2 மே 2020 (16:28 IST)
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு... 
 
மக்கள் ஊரடங்கு அறிவித்து  38 நாட்களில் இதுவரை 1 லட்சத்து 30 ஆயிரம் பரிசோதனைதான் இந்தியா முழுவதும் நடந்துள்ளது. ஆனால் அமெரிக்காவில் 17 லட்சம் சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நார்வே 10 லட்சம் பேருக்கு 19,528 சோதனை செய்யும்போது 137 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 93 பேருக்கு மட்டுமே செய்வதுதான் மோடி ஆட்சியின் கொரோனா ஒழிப்பா?
 
ஐசிஎம்ஆர் என்பது ஆராய்ச்சி நிறுவனம்தான்.  பெரிய அளவிலான கொள்முதல் செய்த அனுபவமோ, தகுதியோ இல்லாத ஐசிஎம்ஆரை, ரேபிட் கருவிகள் வாங்க பயன்படுத்திவிட்டு, முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் வைத்து மறைக்கப் பார்க்கிறது மத்திய அரசு.
 
இந்தியா முழுவதும் 277 சோதனை ஆய்வகங்களை வைத்துக்கொண்டு கொரோனா நோயை கண்டறிய முடியாமல் மத்திய அரசு விழிபிதுங்கி நிற்கிறது. கொரோனா நோயை கண்டறிய சோதனை செய்யாமலேயே 38 நாட்கள் மக்கள் ஊரடங்கு முடிந்துவிட்டது. இன்னும் எத்தனை நாட்களுக்கு ஊரடங்கு நீடிக்கப்போகிறதோ தெரியவில்லை.
 
கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 38 நாட்களாக  வேலையை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து, உணவுக்கு கையேந்தி ஒவ்வொரு நாளையும் ஒரு யுகமாக கடத்திக் கொண்டிருக்கின்றனர். எல்லாவற்றையும் இழந்து நிற்கும் மக்களுக்கு, இதுபோன்ற முறைகேடுகள் அநீதி இழைப்பதாக அமையாதா, கைதட்டச் சொன்னீர்கள் தட்டினோம். விளக்கேற்றச் சொன்னீர்கள் ஏற்றினோம். இதுபோன்ற முறைகேடுகளால், உலகமே  கைதட்டி சிரிக்கும் நிலையை ஏற்படுத்தி விடாதீர்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்