உங்கள் மகள் எவ்வளவு மதிப்பெண்?: கிருஷ்ணசாமியை ஓட்டம் பிடிக்க வைத்த பத்திரிகையாளர்கள்!

செவ்வாய், 5 செப்டம்பர் 2017 (16:47 IST)
அனிதா மரணம் குறித்து தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.


 
 
அந்த மனுவில் அனிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கிருஷ்ணசாமிக்கும் செய்தியாளர்களுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இந்த பேட்டியின் போது கிருஷ்ணசாமி அனிதா அரியலூரில் தனியார் பள்ளி ஒன்றில் ஒன்றரை லட்சம் கட்டணம் கட்டி படித்துள்ளார் என ஒரு தகவலை கூறினார்.
 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த செய்தியாளர்கள் அதற்கான ஆதாரம் இருக்கிறதா என கேள்வி எழுப்பினர். ஆனால் கிருஷ்ணசாமி தனது கருத்தில் இருந்து உடனடியாக பின்வாங்கினார். அது தகவல், நீங்கள் சொன்னால் நான் அதனை மாற்றிக்கொள்கிறேன் என ஜகா வாங்கினார்.
 
அதன் பின்னர் கிருஷ்ணாசாமியை கேள்விகளால் பத்திரிகையாளர்கள் துளைத்தெடுத்தனர். ஆனால் அதற்கு பதில் சொல்ல முடியாமல் கிருஷ்ணசாமி திணறினார். இன்றைய செய்தி அனிதா எனவே அவரது மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டும். மற்ற விஷயங்கள் குறித்து இப்போது கேள்வி கேட்க வேண்டாம், பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என கூறினார். இதற்கு பத்திரிகையாளர்கள் நாங்கள் என்ன கேள்வி கேட்க வேண்டும் என நீங்கள் தீர்மானிக்கக் கூடாது என பதிலடி கொடுத்தனர்.
 
தொடர்ந்து கிருஷ்ணசாமி தனது மகளுக்கு மருத்துவ சீட்டை ஜெயலலிதாவின் சிபாரிசின் பேரில் வாங்கியது குறித்தும், அவரது மகளின் மதிப்பெண் எவ்வளவு என்பது குறித்தும் கேள்வி எழுப்பினர் பத்திரிகையாளர்கள். ஆனால் அதற்கு எல்லாம் பதில் அளிக்காமல் உடனடியாக அந்த இடத்தில் இருந்து ஓட்டம் பிடித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்