கிருஷ்ணகிரி பாலியல் வழக்கு..! பள்ளியை நிர்வகிக்க சிறப்பு அதிகாரி நியமனம்.!

Senthil Velan

வியாழன், 5 செப்டம்பர் 2024 (17:27 IST)
போலி என்.சி.சி முகாம் நடத்திய கிருஷ்ணகிரி தனியார் பள்ளியை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என சென்னை உயர் நீதிமன்றத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அதிகாரி அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்றில் கடந்த மாதம் என்.சி.சி பயிற்சி முகாம் நடந்தது. இதில் 13 வயது மாணவி, போலி என்.சி.சி பயிற்சியாளர் சிவராமன் என்பவரால், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். மேலும் 13 மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.
 
மாணவியின் பெற்றோர் அளித்த புகாரை அடுத்து அந்த போலி என்சிசி பயிற்சியாளர் சிவராமன், உதவி பயிற்சியாளர்கள், பள்ளியின் முதல்வர், தாளாளர், ஆசிரியர்கள் என 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிவராமன், தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது தந்தையும் ஒரு விபத்தில் உயிரிழந்தார். 
 
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி, வழக்கறிஞர் சூரிய பிரகாசம் தாக்கல் செய்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது, போலி என்.சி.சி முகாம் நடத்திய கிருஷ்ணகிரி தனியார் பள்ளியை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என சென்னை உயர் நீதிமன்றத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அதிகாரி அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.


ALSO READ: காதலனால் தீ வைத்து எரிக்கப்பட்ட ஒலிம்பிக் வீராங்கனை.! மருத்துவமனையில் பலி.!!

தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட பன்னோக்கு சிறப்புக்குழுவின் அறிக்கையும் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் சிறப்பு குழுவானது சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்கு சென்று பாதிக்கப்பட்ட மாணவிகள், அவர்களுடைய பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கியதாகவும், பாதிப்பிலிருந்து விரைந்து மீட்டுவர அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கு செப்டம்பர் 12 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்