கிருஷ்ண ஜெயந்தி: முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து

சனி, 5 செப்டம்பர் 2015 (07:05 IST)
கடமையின் சிறப்பையும், பயன் கருதாப் பணியின் உயர்வையும் உணர்ந்து வாழ்ந்திட வேண்டுமென்று கூறி முதலமைச்சர் ஜெயலலிதா கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து கூறியுள்ளார்.
 
இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
 
உலகம் போற்றும் ஒப்பற்ற ஞான நூலாம் பகவத் கீதையை அருளிய பகவான் கிருஷ்ணர் அவதரித்த திருநாளை கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும் என் இனிய நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
 
கிருஷ்ண ஜெயந்தியன்று, மக்கள் தங்கள் இல்லங்களில் அழகிய வண்ணக்கோலங்களிட்டு, வாயிற்களில் மாவிலை தோரணங்களைக்கட்டி, ஸ்ரீபாதம் எனப்படும் குழந்தைகளின் பிஞ்சு பாதச்சுவடுகளை மாவில் நனைத்து இல்லங்களில் வழி நெடுக பதித்து, கிருஷ்ணருக்கு விருப்பமான வெண்ணெய், தயிர், பழங்கள், இனிப்பு பலகாரங்களைப் படைத்து, இறைவனை பக்தியுடன் வணங்கி வழிபடுவார்கள்.
 
பற்றின்றி கடமைகளை செய்து, பலன்களை இறைவனுக்கு அர்ப்பணிப்பவன், தாமரை இலை எவ்வாறு நீரால் பாதிக்கப்படுவதில்லையோ, அதுபோல விளைவுகளால் பாதிக்கப்படுவதில்லை என்ற கீத உபதேசத்தை மனதில் நிறுத்தி, கடமையின் சிறப்பையும், பயன் கருதாப் பணியின் உயர்வையும் உணர்ந்து வாழ்ந்திட வேண்டுமென்று கேட்டுக்கொண்டு, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்