விஜயகாந்தை சந்தித்தார் பாடகர் கோவன்

சனி, 28 நவம்பர் 2015 (13:48 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்தை பாடகர் கோவன் சந்தித்துப் பேசினார்.


 

 
மக்கள் கலை இலக்கிய கழகத்தைச் சேர்ந்தவர் பாடகர் கோவன். இவர் மதுவிலக்கை ஆதரித்து பாடல்கள் எழுதி சமூக வலை தளங்களில் வெளியிட்டு பிரசாரம் செய்தார்.
 
இதனால், கோவன் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து ஜாமீனில் வெளிவந்துள்ள அவர் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து வருகின்றார்.
 
அதன்படி, திமுக தலைவர் கருணாநிதி, காங்கிரஸ் கட்சியின் தமிழதத் தலைவர் இளங்கோவன் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
 
இந்நிலையில் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது.
 
பின்னர் கோவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
 
கைது செய்யப்பட்டபோது எனக்கு அனைத்து கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்தனர். அதற்கு நன்றி தெரிவிக்கவே இன்று விஜயகாந்தை சந்தித்தேன்.
 
அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரையும் சந்தித்து விட்டேன். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை இன்று சந்திக்க இருக்கிறேன்.
 
திருச்செங்கோடு பள்ளியில் தேர்வின் போது 6 மாணவிகள் மது குடித்து விட்டு வந்ததற்கு அரசுதான் காரணம்.
 
மதுக்கடை இல்லை என்றால் அந்த மாணவிகள் மது குடித்திருக்க மாட்டார்கள். எனவே, தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
 
தேர்தலுக்காக அதை செய்யாமல் முன்கூட்டியே செய்ய வேண்டும். நான் கைது செய்யப்பட்டபோது எனக்கு ஆதரவாக இருந்த அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு கோவன் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்