தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடிந்து வேட்பாளர் பட்டியலும் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை தெற்கு தொகுதி பல்வேறு காரணங்களால் உற்று நோக்கப்படும் தொகுதியாக மாறியுள்ளது. கோவை தெற்கில் அதிமுகவிற்கு ஓரளவு செல்வாக்கு இருந்தபோதிலும் அதை பாஜக கூட்டணிக்கு ஒதுக்கியது அதிமுகவிற்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் திமுகவும் கோவை தெற்கை காங்கிரஸுக்கு ஒதுக்கிவிட இரண்டு பெரிய கட்சிகள் இல்லாததாலும், செல்வாக்கு இல்லாத தேசிய கட்சிகள் கூட்டணி களம் காண்பதாலும், சகல விதத்திலும் வெற்றி வாய்ப்புக்கு வாய்ப்புள்ள தொகுதியாக மய்யத்தாரால் பரிந்துரைக்கப்பட்டு கோவை தெற்கில் களம் காண்கிறார் கமல்ஹாசன்.
அதேபோல தற்போது பாஜக வேட்பாளராக கோவை தெற்கில் களம் காணும் பாஜக மகளிரணி தலைவி வானதி சீனிவாசனும் கோவை தெற்கில் சற்று செல்வாக்கு உள்ளவராகவே கூறப்படுகிறார். இந்நிலையில் கோவைக்கு பெரிதும் தொடர்பில்லாத கமல்ஹாசன் கோவை தெற்கில் வெல்வது கடினமான மும்முனை போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது. கடந்த மக்களவை தேர்தலில் மநீமவுக்கு அதிக ஓட்டுகள் கிடைத்த தொகுதிகளில் முக்கியமான தொகுதி கோவை தெற்கு என்பதால் மய்யத்தார் நம்பிக்கையுடன் களம் இறங்கியிருப்பதாக பேசிக் கொள்ளப்படுகிறது.