முத்தப்போராட்டத்திற்கு எதிராக இந்து முன்னணியினர் ‘காறி உமிழும் போராட்டம்’

செவ்வாய், 18 நவம்பர் 2014 (10:48 IST)
சென்னை ஐஐடி மாணவர்கள் முத்தம் கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதை கண்டித்து, இந்து முன்னணி சார்பில் காறி துப்பும் போராட்டம் நடைபெற்றது.

கேரள மாநிலத்திலுள்ள ஒரு நட்சத்திர விடுதியில், சில நாட்களுக்கு முன்பு நடன நிகழ்ச்சி நடந்தது. அதில், கலந்து கொண்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை பாஜகவினர் விரட்டி அடித்தனர். இதனால் பாஜக தொண்டர்களுக்கும், இளைஞர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.
இதனைல் கண்டித்து “கிஸ் ஆப் லவ்“ என்ற முத்தம் கொடுக்கும் அமைப்பு தொடங்கப்பட்டது. இவர்கள், பொது இடங்களில் கூடி ஒருவருக்கொருவர் முத்தம் கொடுத்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த போவதாக அறிவித்தனர். இதனால் கடந்த 2ஆம் தேதி கொச்சியில் இந்த அமைப்பினர் கூடி ஒருவருக்கொருவர் முத்தமிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில அமைப்பினரும் அங்கு குவிந்தனர். முத்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர்.


 
 
இந்நிலையில், இதன் ஒரு அங்கமாக சில நாட்களுக்கு முன் மும்பை ஐஐடியிலும், சென்னை ஐஐடியிலும் மாணவ, மாணவிகள் ‘கிஸ் ஆப் லவ்‘ அமைப்பிற்கு ஆதரவு தெரிவித்து முத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை ஐஐடி மாணவர்களின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து இந்து முன்னணி சார்பில் காறி துப்பும் போராட்டம் நேற்று நடந்தது.

ஐஐடி நுழைவாயிலில், இந்து முன்னணி மாநில பொது செயலாளர் பரமேஸ்வரன், மாவட்ட தலைவர் மனோகரன் தலைமையில் ஏராளமான இந்து முன்னணியினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முத்த போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து காறி துப்பி கோஷமிட்டனர். இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்