ஜெ. ரேகை சந்தேக வழக்கு: அரசியலை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் என நீதிபதி கண்டனம்

வியாழன், 17 நவம்பர் 2016 (18:41 IST)
அரசியலை நீதிமன்றத்திற்கு வெளியே வைத்துக் கொள்ளுங்கள். தேர்தலை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டுமே தவிர நீதிமன்றம் மூலம் எதிர்கொள்ளக் கூடாது என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


 

தஞ்சாவூர் தொகுதி சுயேச்சை வேட்பாளர் ரமேஷ் காந்தி சென்னை உயர்நீதி மன்றத்தில் செய்த மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், ’தஞ்சை தொகுதி அதிமுக வேட்பாளர் ரங்கசாமியின் வேட்புமனுவில் சின்னம் ஒதுக்கும் படிவத்தில் முதலமைச்சரின் கைரேகையின் உண்மைத் தன்மையை யாரும் நிரூபிக்காத காரணத்தால் அவரது வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதனன்று (16-11-16) விசாரணைக்கு வந்தது.

அப்போது கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி, ’இந்த கைரேகை தொடர்பாக ஒருவர் மாற்றி ஒருவர் வழக்கு தொடர்ந்து கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் தேர்தல் களத்தில் போட்டியிடுவது மட்டுமல்லாமல் நீதிமன்றத்திலும் போட்டியிடுகிறீர்கள். அரசியலை நீதிமன்றத்திற்கு வெளியே வைத்துக்கொள்ளுங்கள்.

தேர்தலை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டுமே தவிர நீதிமன்றம் மூலம் எதிர்கொள்ளக் கூடாது. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை எதிர்கொள்ள அச்சமிருந்தால் ஏன் சுயேட்சையாக போட்டியிட வேண்டும். ஏற்கனவே தேர்தல் சின்னம் ஒதுக்கப்பட்டுவிட்டதால் இந்த மனுவை விசாரிக்க முடியாது” என மனுவை தள்ளுபடி செய்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்