சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நடித்து வரும் நடிகை சுபாஷினி, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை கலைஞர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பி. செல்வம் இயக்கத்தில் சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் கார்த்திக் முக்கிய வேடங்களில் நடித்து வரும் 'கயல்' சீரியல், குடும்ப ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற தொடராகும். இந்தத் தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சுபாஷினி. இலங்கை நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், தனது கணவர் பிப்பின் என்பவருடன் பெங்களூருவில் வசித்து வந்துள்ளார். சீரியல் படப்பிடிப்புகளில் கலந்து கொள்வதற்காக, சென்னை போரூர் அடுத்த ஐயப்பன்தாங்கலில் உள்ள ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் அறை எடுத்துத் தங்கி வந்துள்ளார். சமூக வலைத்தளங்களிலும் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வரும் இவர், அவ்வப்போது தனது படப்பிடிப்பு தள புகைப்படங்களையும் பதிவிட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று இரவு சுபாஷினி தனது ஐயப்பன்தாங்கல் இல்லத்தில் திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்துத் தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுபாஷினியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் நேற்று இரவு சுபாஷினி பெங்களூருவில் உள்ள தனது கணவர் பிப்பினிடம் வீடியோ காலில் பேசியுள்ளார். அப்போது கணவன் - மனைவி இருவருக்கும் இடையே குடும்பப் பிரச்சினை காரணமாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகராறினால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் அதீத மன அழுத்தம் காரணமாகவே சுபாஷினி இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.