ஹவாலா பணத்தை அபேஸ் செய்த கரூர் போலீஸ் அதிகாரிகள் : அதிர்ச்சி தகவல்

புதன், 21 செப்டம்பர் 2016 (16:59 IST)
இந்திய அளவில் ஹவலா பணம் மாநிலம் விட்டு மாநிலம் கடத்தப்படும் நிலையில், ஆங்காங்கே நடக்கும் விபத்துகள் இந்த ஹவாலா பணம் சிக்குவது சம்பவத்தை செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் பார்க்க நேரிடும் வகையில் கோவையில் மட்டுமே அடிக்கடி ஹவாலா பணம் பிடிபடுவதை கண்டு அதிர்ச்சியடைந்த கரூர் மாவட்ட காவல்துறையினர், ஒரு பெரிய ஸ்கெட்ச் போட்டு பல கோடியை கடத்த திட்டமிட்ட சம்பவம் தமிழக அளவில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் ஒரு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 



 
கடந்த 2015 ம் வருடம் ஜனவரி மாதம் 7ம் தேதி கோவை பாலக்காடு பைபாஸ் சாலையில் காலை ஈரோட்டில் இருந்து கேரள மாநிலம் மலப்புரத்துக்கு ஒரு கார் புறப்பட்டது. காரை யாசர் என்பவர் ஓட்டி வந்தார். காரில் ஜலில் உள்பட 3 பேர் இருந்தனர்.
 
ஈச்சனாரி அருகே உள்ள தனியார் கல்லூரி அருகே வந்தபோது மதுக்கரை மார்க்கெட் போடிபாளையம் செல்லும் 31 என்ற நம்பர் உள்ள அரசு பஸ் வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் அரசு பஸ்சும், காரும் மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. டிரைவர் யாசரும் மற்றொருவரும் படுகாயம் அடைந்தனர்.
 
காரில் இருந்து கட்டுக்கட்டாக ரோட்டில் பணம் சிதறியது. பணத்தை அந்த வழியாக சென்ற சிலர் எடுத்துச்சென்றனர். விபத்து குறித்து மதுகரை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
 
காரை சோதனை செய்ததில் காரின் 4 பக்க கதவில் ரகசிய அறை அமைத்திருந்தது தெரிய வந்தது. ரகசிய அறையை திறந்து பார்த்தபோது 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கபட்டிருந்ததும், அதில் இருந்து சிதறி ரோட்டில் கிடந்ததும் தெரியவந்தது.
 
இது குறித்து வருமான வரித்துறைக்கும், மதுக்கரை வட்டாட்சியருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. காரில் பயணம் செய்த ஜலில் மற்றொருவரிடம் விசாரணை நடத்தியபோது ஈரோட்டில் உள்ள முஸ்தபா என்பவர் கேட்டரிங் வைக்க பணத்தை தந்ததாக கூறினார்.
 
இதனையடுத்து முஸ்தபாவை கோவைக்கு போலீசார் அழைத்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்திய பின்னர் தான் இந்த பணம் ஹவாலா பணமா? அல்லது வேறு பயன்பாட்டுக்காக கொண்டு செல்லப்பட்டதா? என்பது குறித்து தெரியவரும் என்று கூறப்பட்டது.

 
 
பின்னர் அந்த சம்பவம் அப்படியே மூடி மறைக்கப்பட்டது. ஆனால் அப்போது கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படும் பணம் ரூ.3 கோடி முதல் 5 கோடி வரை இருக்கும் என்று தெரிந்தது. 
 
இந்நிலையில் இந்த வருடம் கோவை அருகே கேரள தொழிலதி பரின் கார் கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி  கடத்தப்பட்ட விவகாரத்தில், காரில் கோடிக் கணக்கில் பணம் இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தைத் தொடர்ந்து, 4 தனிப்படைகள் அமைத்து போலீஸார் விசாரணை நடத்தினர். 
 
அப்போது கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்தவர் அன்வர் சதா(34). அங்கு தங்க நகைக் கடை நடத்தி வருகிறார். இவரிடம் பணிபுரியும் முகமது இப்ராஹிம், முசீர், ஆனந்த், சீதோஸ் ஆகியோர் தொழில் நிமித்தமாக சென்னை சென்றுவிட்டு மீண்டும் மலப்புரம் நோக்கி சொகுசு காரில் 25ம் தேதி காலை வந்துகொண்டு இருந்த போது கோவை  ஈச்சனாரி  அருகே  மற்றொரு  காரில்  வந்த  5  பேர் , ‘போலீஸ்’ என கூறி முகமது இப்ராஹிம் ஓட்டி வந்த காரை மறித்து, கடத்திச்  சென்று விட்டதாக  மதுக்கரை  போலீஸில்  புகார்  தெரிவிக்கப்பட்டது. 
 
இந்நிலையில், காரில் கோடிக் கணக்கில் பணம் கொண்டு செல்லப்பட்டதாக தகவல் பரவியதை அடுத்து, அன்றைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரம்யா பாரதி தலைமையிலான போலீஸார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். பணம் குறித்து புகாரில் தெரிவிக்கவில்லை என்றும், கடத்தப்பட்ட காரை மட்டும் மீட்டுத் தருமாறு அதில் தெரிவித் துள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர். 
 
இருப்பினும், இந்த விவகாரத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்ததால்,  பேரூர் சரக டி.எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி மேற் பார்வையில் 4 தனிப்படைகளை அமைத்து விசாரிக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். 
 
ஹவாலா பணமா? 
 
தனிப்படை போலீஸார், கேரள மாநிலம் சென்று அடுத்த நாளான 26 ம் ஆம் தேதி விசாரணை மேற்கொண்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது. கார் மட்டுமே கடத்தப்பட்டதாக அளிக்கப் பட்டுள்ள புகாரில், 4 தனிப்படை போலீஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளதால், ஹவாலா பணம் எடுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. 
 
தனிப்படை போலீஸார், கேரள மாநிலம் சென்று அன்று முதல் ஒரு வார காலமாக விசாரணை மேற்கொண்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 
 
இந்நிலையில் நேற்று திடுக்கிடும் தகவல் வெளியான நிலையில் காவல்துறை வரலாற்றிலே பெரும் சோகத்தை ஏற்படுத்தும் பொருட்டு, கோவையில் போலீஸ் வேடமிட்டு காருடன் சுமார் ரூ.4 கோடி கடத்தியதாக சொல்லப்பட்ட வழக்கில், கடத்தியது நிஜ போலீஸ் தான் என்பது இப்போது தெரியவந்துள்ளது. ஹவலா பணத்தை கொள்ளையடித்த இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட மூன்று போலீசார் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ள செய்தி பெரும் பீதியையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது. 
 
சினிமாவையே தாண்டிய ஹவலா பணத்தில் கை வரிசை காட்டிய நிஜ போலீஸாரினால் காவல்துறைக்கு கரும்புள்ளியா? இல்லை உயர் அதிகாரிகளின் தயவால் தான் இந்த சினிமா பாணியில் கோவை அருகே கடத்தப்பட்ட காரில் கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்யப்பட்டதா தெரியவில்லை.
 
4 தனிப்படை போலீஸார் விசாரணையில், ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு சப் இன்ஸ்பெக்டர் மற்றும்  தலைமைக்காவலர் என்று கரூர் மாவட்டத்தில் பணிபுரிந்த 3 பேர் மீது வழக்கு  பதிவு செய்துள்ளதாகவும், மேலும் அக்காவலர்கள் பணியிடை நீக்கம் செய்துள்ளதாகவும் திருச்சி டி.ஐ.ஜி அருண் தெரிவித்துள்ளார்.
 
அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி வருகிறது தமிழக காவல்துறை என்பது கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிறையில் ராம்குமார் மர்மமான முறையில் உயிரிழக்க அந்த பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில், தற்போது கோடிக்கணக்கில் பணத்தை நிஜ போலீஸே கொள்ளையடித்ததாக இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட மூன்று  போலீசார் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழக முதல்வர் அங்கம் வகிக்கும் காவல்துறைக்கு கரும்புள்ளியை ஏற்படுத்தியதோடு, இந்த கொள்ளைக்கு பின்னணியில் யார், யார் முக்கிய அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளனர் என்பது இன்றும் மர்மம் நீடிப்பதாக சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், இந்த சம்பவத்தில் தொடர்புடைய சுதீர்,சபீக்,சுபாஷ் ஆகியமூன்று பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையின் போது போலீஸ் வேடமிட்டு கொள்ளையடித்த நபர்கள் குறித்து போலீசார் கேள்வி எழுப்பினர். அப்போது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது நிஜ போலீஸ் தான் என அவர்கள் தெரிவித்தனர். 


 

 
கரூர் மாவட்டம் க.பரமத்தி காவல் ஆய்வாளர் முத்துக்குமார், உதவி ஆய்வாளர் சரவணன், ஏட்டு தர்மேந்திரன் ஆகியோர் தான் இந்த சம்பவத்தில் எங்களோடு ஈடுபட்டதாகவும், அவர்கள் 2 கோடி ரூபாயை எடுத்துக்கொண்டதாகவும்,  மீதமுள்ள 1.90 கோடியை நாங்கள் எடுத்துக்கொண்டோம் என தெரிவித்தனர்.
 
இது தொடர்பாக விசாரித்த திருச்சி டி.ஐ.ஜி. அருண், இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சரவணன், தர்மேந்திரன் ஆகிய மூவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். 
 
இதையடுத்து இவர்களில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமாரை கோவை போலீஸார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். எஸ்.ஐ. சரவணன், ஏட்டு தர்மேந்திரன் ஆகியோர் தலைமறைவாகினர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இன்ஸ்பெக்டரிடம் மதுக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் பின்னணியில் உள்ள மற்றவர்கள் குறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இவர்கள் மூவரும் கைது செய்து சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர். சினிமாவை மிஞ்சும் வகையில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
 
கோவையில் போலீஸ் வேடமிட்டு காருடன் ரூ.4 கோடி கடத்தியதாக சொல்லப்பட்ட வழக்கில், கடத்தியது நிஜ போலீஸ் தான் என்பது இப்போது தெரியவந்துள்ளது. ஹவலா பணத்தை கொள்ளையடித்த இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட மூன்று போலீசார் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். 

சி.ஆனந்தகுமார் - செய்தியாளர்

வெப்துனியாவைப் படிக்கவும்