தனது அறிவை கருணாநிதி வேறு விஷயத்துக்கு பயன்படுத்தலாம் : சரத்குமார் பாய்ச்சல்

ஞாயிறு, 12 ஜூன் 2016 (18:24 IST)
திமுக தலைவர் கருணாநிதி தன்னுடைய அனுபவம் மற்றும் அறிவை ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு செயல்படுத்துவது நல்லது என்று நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பற்றியும், காவல் துறை செயல்பாடுகள் பற்றியும் திமுக தலைவர் கருணாநிதி கூறியிருக்கும் கருத்துக்கள் அவரின் ஞாபக சக்தியின் வலிமையை குறைத்து காட்டுகின்றன. அவருடைய இந்த செய்தியை படித்தபின் அதற்கு தகுந்த பதில் அளிக்கும் வகையில் திமுக ஆட்சியில் நடந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனையை பற்றி நீண்ட பட்டியலிடலாம் என்பது அனைத்து தரப்பு மக்களுக்கும் தெரிந்த உண்மை.
 
அவர் குறிப்பிட்டுள்ள செய்தித்தாள்களில் வெளிவந்துள்ள சில அசம்பாவிதங்கள் தவிர்க்கப் படவேண்டியவை என்றாலும், அதில் குறிப்பிட்டுள்ள பெரும்பாலான குற்றங்கள், தனி மனித பகை மற்றும் வன்மம், குரோதம், தனிமனித ஒழுங்கீன செயல்கள் அடிப்படையில் அமைந்தவை. குழந்தைகள் சிதைக்கப்படுவது போன்ற குற்றங்கள் எந்த காலத்திலும் மன்னிக்கவே முடியாத குற்றங்கள். 
 
நிலையான அறிவு இருக்கும் எந்த மனிதனும் இதைச் செய்ய முடியாது. தனி மனிதர்களின் ஒழுக்கம் சம்பந்தப்பட்ட குற்றங்களை மற்றக் குற்றங்களுடன் சேர்த்து பட்டியலிடும் கருணாநிதி, அவர்தம் ஆட்சி காலத்தில், நடந்த கலவரங்கள், சாதியின் பெயரில் தூண்டிவிடப் பட்ட வன்முறைகள் பற்றி மறந்திருப்பது ஆச்சர்யத்தை தருகிறது.
 
தேர்தல் தோல்வியால் அவர் அடைந்திருக்கும் ஏமாற்றம், கடந்த சில நாட்களாக அவர் வெளிப்படுத்தும் வார்த்தைகளில் எதிரொலிக்கிறது.
 
காவல்துறை முதல்வரின் பொறுப்பில் இருக்கிறது என்பதற்காகவே அந்த துறையை குற்றம் சாட்டியிருப்பது அவரின் அறிவு முதிர்ச்சிக்கு அழகல்ல. மக்கள் இதை விரும்ப மாட்டார்கள் என்பதையும் அவர் கருத்தில் கொள்ள வேண்டும். குற்றங்களை மட்டும் பட்டியலிடாமல், ஆக்கப் பூர்வமான பணிகளுக்கு தனது அனுபவத்தையும் அறிவையும் பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்