ஜெயலலிதா நல்ல மருத்துவரை பார்ப்பது நல்லது : கருணாநிதி பதிலடி
வெள்ளி, 24 ஜூன் 2016 (19:22 IST)
திமுகவின் கட்சித் தலைவர் யாரென்று புரிந்து கொள்வதில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிரச்சனை இருக்கிறது எனில், அவர் நல்ல மருத்துவரை நாடுவது நல்லது என்று திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முதலமைச்சர் ஜெயலலிதா கச்சத் தீவு பற்றி எவ்விதத் தேவையோ, அடிப்படையோ இல்லாமல் மீண்டும் தமிழகச் சட்டப்பேரவையில் எனக்குக் கேள்வி எழுப்பியிருக்கிறார். சாதாரணமாக அமைச்சர்களை நோக்கித்தான் பேரவையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்புவார்கள். ஆனால் ஜெயலலிதா என்னிடம் திரும்பத் திரும்பக் கேள்வி கேட்கிறார். நான் இரண்டு பக்கங்களுக்கு முரசொலியில் கச்சத்தீவு பற்றி விரிவாக விளக்கங்களை அளித்த பிறகும், அதில் ஜெயலலிதா எந்தெந்தச் சந்தர்ப்பங்களில் கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டதை நியாயப்படுத்திக் குறிப்பிட்டது பற்றிச் சுட்டிக்காட்டிய பிறகும் அதைப் படிக்காமல் என்னிடமே கேள்வி கேட்கிறார்.
பேரவையில் என்னுடைய விளக்கங்களைப் படித்துக் காட்ட முன் வந்த தம்பி துரைமுருகனையும் பேசுவதற்கு அனுமதிக்காமல் ஜெயலலிதா, அவருக்கு எழுதிக் கொடுத்ததை அப்படியே படித்திருக்கிறார். அவர் கேட்டுள்ள கேள்விகளுக்கான விளக்கத்தை என்னுடைய உடன்பிறப்புகளுக்கான நீண்ட மடலில் அளித்து விட்டேன். அளித்ததோடு மட்டுமல்லாமல், அவர் பிரதமர்கள் நரசிம்மராவுக்கும், வாஜ்பாய்க் கும் எழுதிய கடிதங்களில் அவரைக் காட்டிக் கொடுப்பதாக உள்ள வாசகங்களை அப்படியே ஆங்கிலத்திலேயே குறிப்பிட்டு, அதற்கு விளக்கம் கேட்டிருந்தேனே, அதற்கு முதலமைச்சர் ஜெய லலிதா பேரவையில் விளக்கம் அளித்திருக்க வேண்டாமா? அதற்கு விளக்கமளிக்காமல், வினாக்களை மட்டும் தொடுத்துக் கொண்டிருந்தால், அவரிடம் விளக்கமளிக்க வேறெதுவும் இல்லை என்றுதானே பொருள்?
ஜெயலலிதா தனது முதல் கேள்வியாக, 1974ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி திடீரென்று அறிவிப்பு வந்தவுடன்தான் அதுபற்றி தெரியும் என்று சொன்னதும் - 15-4-2013 அன்று டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தி.மு.க. அரசு வலியுறுத்தித்தான் சில ஷரத்துகள் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டன என்று கூறுவதும் ஒன்றுக்கொன்று முரண்பாடானதில்லையா என்று கேட்டுள்ளார். இந்தக் கேள்வியை ஜெயலலிதா இப்போது புதிதாகக் கேட்கவில்லை. பல முறை ஜெயலலிதா கேட்டு, ஒவ்வொரு முறையும் நான் அதற்கு விளக்கமாகப் பதிலளித்திருக்கிறேன்.
சான்றோடு சொல்ல வேண்டுமேயானால், 3-5-2013 அன்று தமிழகச் சட்டப்பேரவையில் பேசும்போதே, “1974இல் திரு. கருணாநிதி கச்சத் தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட செய்தியை, பத்திரிகைகளில் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன், பதறிப் போனேன் என்கிறார். ஆனால் 2013இல் ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பே இவர் சொல்லித்தான் சில ஷரத்துக்கள் சேர்க்கப்பட்டன என்கிறார். இது என்ன பித்தலாட்டம்?” என்று பேரவையில் பேசி, அது அவை நடவடிக்கைக் குறிப்பிலும் இடம் பெற் றுள்ளது. ஜெயலலிதாவின் இந்தக் கேள்விக்கு 5-5-2013 அன்றே “வாய் நீளம் தோற்றுப் போகும்; வாய்மையே வெல்லும்” என்ற தலைப்பில் விளக்க மாகப் பதில் எழுதி, அது சிறு கையேடாகவும் வெளிவந்தது.
15-4-2013 அன்று “டெசோ” கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “1974ஆம் ஆண்டு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்ட போது, கழக அரசு முதல் நிலையிலேயே அதனைக் கடுமையாக எதிர்த்தது. அதையும் மீறி ஒப்பந்தம் கையெழுத்தான போது, குறைந்தபட்சம் தமிழக மீனவர்களுக்கு கச்சத் தீவுப் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையும், மீனவர்களின் வலைகளை அங்கே உலர்த்திக் கொள்வதற்கான உரிமையும் அந்த ஒப்பந்தத்தின் பிரிவுகளில் சேர்க்கப்பட வேண்டுமென்று கழக அரசு வலியுறுத்தி, அந்த ஷரத்துக்கள் சேர்க்கப்பட்டன” என்று கூறப்பட்டுள்ளது.
தீர்மானத்தில் ஒப்பந்தம் கையெழுத்தான போது என்றுதான் இருக்கிறதே தவிர, ஜெயலலிதா பேரவையில் கூறியதைப் போல, ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பே என்று கூறப்பட வில்லை. அதாவது சில ஷரத்துக்களைச் சேர்க்க வேண்டுமென்று தி.மு.க. கூறியது, ஒப்பந்தம் கையெழுத்தான போதுதானே தவிர, ஜெயலலிதா தன்னுடைய வசதிக்குத் திரித்துக் கூறுவதைப் போல, ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பே என்பது சரியல்ல.
26-3-2013 அன்று இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து வேட்டை யாடுவது பற்றி ஒரு கவன ஈர்ப்புத் தீர்மானம் வந்த போது, முதலமைச்சர் ஜெயலலிதா தேவையில்லாமல் என்னைப் பற்றிக் குறிப்பிட்டு, 1974ஆம் ஆண்டு கச்சத் தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டதாக வும், அப்போது தமிழக முதலமைச்சராக நான்தான் இருந்தேன் என்றும் குற்றஞ்சாட்டினார். அதற்கும் நான் 28-3-2013 அன்றே பதிலளித்திருந்தேன். அந்தப் பதிலில், “1974ஆம் ஆண்டில் கச்சத் தீவை இலங்கைக்குத் தருவதென்ற முடிவை மத்திய அரசு எடுத்த போது, அன்றைய தமிழகத்திலே இருந்த மாநில அரசான திராவிட முன்னேற்றக் கழக அரசு, அதற்குப் பெரும் எதிர்ப்பைத் தெரிவித்தது.
அதையும் மீறி, சில காரணங்களைச் சொல்லி கச்சத் தீவு இந்திய அரசினால் இலங்கைக்கு வழங்கப்பட்டு விட்டது. அப்படி வழங்கப்பட்ட நேரத்திலேகூட, கச்சத் தீவிலே மீன் பிடிக்கும் உரிமை, யாத்திரை செல்கின்ற உரிமை, மீன் வலைகளைக் காய வைப்பதற்கான உரிமை இவைகள் எல்லாம் மீனவ மக்களுக்கு உண்டு என்கிற ஷரத்து அதிலே சேர்க்கப்பட வேண்டுமென்று அன்றைய தி.மு.க. அரசு வலியுறுத்தியதன் பேரில், அந்த ஷரத்து அதிலே சேர்க்கப்பட்டது” என்று குறிப்பிட்டிருக்கிறேன்.
இன்னும் சொல்லப்போனால், அந்தக் கடிதத்தில், கச்சத் தீவு ஒப்பந்தம் கூடாது என்றும், கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதியே என்றும், பல்வேறு ஆதாரங்களோடு முதலமைச்சர் என்ற முறையில் 6-1-1974 அன்றே, பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவர்களுக்கு நான் எழுதிய கடிதத்தையும் விளக்கியிருந்தேன். மேலும் அந்தக் கடிதத்தில், “திருமதி இந்திரா காந்தி பிரதமராக இருந்த நேரத்திலேதான் கச்சத்தீவினை இலங்கைக்குத் தர வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது அவர்கள் வெளியுறவுத் துறை அமைச்சரையும், அதிகாரிகளையும் என்னிடம் அனுப்பி விவாதிக்கச் செய்த போது, தமிழக அரசின் சார்பில் நாங்கள் எங்கள் கடுமையான எதிர்ப்பினைப் பதிவு செய்த பிறகும், கச்சத் தீவினை மத்திய அரசு இலங்கைக்கு வழங்கியது” என்பதையும் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறேன்.
1974ஆம் ஆண்டு இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தான செய்தி அறிந் ததும் நான் திடுக்கிட்டேன், பதறினேன் என்றால், ஒருசில காலமாகப் பேச்சளவில் மட்டும் இருந்து திடீரென தமிழக அரசின் ஒப்புதல் இல்லாம லேயே - தெரிவிக்காமலேயே வழங்கப்பட்டு விட்டதே என்ற அதிர்ச்சியில்தானே தவிர வேறல்ல. கச்சத் தீவை இலங் கைக்கு இந்தியா வழங்கக் கூடுமென்ற செய்தி அதற்கு முன்பே பல ஆண்டுகளாக இருந்து வந்தது. அதற்கும் சான்று கூற வேண்டுமேயானால், 29-3-1972 அன்றே, அதாவது ஒப்பந்தம் ஆவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, சட்டமன்றத்திலே கச்சத்தீவு பற்றிய ஒரு கேள்வியே இடம் பெற்று, அதற்கு நான் பதிலும் கூறியிருக்கிறேன். அந்தப் பதிலில், “நாம் கச்சத் தீவைக் குறித்த நியாயமான விவகாரங்களை மத்திய அரசுக்குத் தெரிவித்திருக் கிறோம். கச்சத்தீவுப் பிரச்சினை இந்திய அரசு தலையிட்டு சுமூகமாகத் தீர்க்கப்பட வேண்டிய ஒரு பிரச்சினை” என்று கூறியிருக்கிறேன். கச்சத் தீவு ஒப்பந்தம் கூடாது என்றும், கச்சத் தீவு இந்தியாவின் ஒரு பகுதியே என்றும், பல்வேறு ஆதாரங்களோடு முதலமைச்சர் என்ற முறையில் 6-1-1974 அன்று பிரதமர் இந்திரா காந்திக்குக் கடிதம் எழுதினேன்.
அடுத்த பக்கம் பார்க்க...
ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, மதுரையில் நான் பேசும்போது, “கச்சத்தீவு தமிழ்நாட்டிற்கே சொந்தம், இந்தியாவிற்கே சொந்தம் என்ற ஆதாரங் களையெல்லாம் பிரதமருக்கு எடுத்து வைத்தேன். எதையும் இலட்சியம் செய்யாமல், என்னை அழைத்து இதுபற்றி ஒரு வார்த்தைகூடப் பேசாமல், கச்சத் தீவை இலங்கைக்குத் தானம் செய்திருக்கிறார் பிரதமர்” என்றும்; திருச்சியிலே நான் பேசும்போது, “கச்சத் தீவு தமிழகத்தின் உரிமை. கச்சத் தீவுப் பிரச்சினையில் நாட்டில் இருக்கும் மக்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறார்கள். அதைக் கேளாமல் இலங்கைக்குத் தூக்கிக் கொடுத்து விட்டு, ஒப்பந்தம் ஆகி விட்ட செய்தியை உலகுக்கு அறிவிக்கிறார்கள். நாம் பத்திரிகையைப் பார்த்துத் தெரிந்து கொள்கிறோம்” என்றும் பேசியிருக்கிறேன்.
ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு செய்தியாளர் கள் என்னிடம் ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டதே, இனிமேல் எதுவும் திருத்தம் செய்ய முடியுமா என்று கேட்ட போது, “மனம் உண்டானால் மார்க்கம் உண்டு. செய்யலாம். ஒப்பந்தம் கையெழுத்தாகும் நேரத்திலோ அல்லது முந்தின நாளோ, தமிழக அரசின் சார்பில் முதலமைச்சரையோ அல்லது மற்ற அமைச்சர்களையோ டெல்லிக்கு அழைத்துப் பேசி இருக்கலாம். இந்த மாநில அரசைக் கலந்து கொள்ளாவிட்டாலும், மிக முக்கியமான பிரச் சினையில் பாராளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களையாவது அழைத்துப் பிரதம மந்திரி, சர்வகட்சிக் கூட்டத்தைக் கூட்டி அவர்களது கருத்துகளை அறிந்து இருக்கலாம். அப்படிச் செய்யாதது வருந்தத்தக்கது” என்று பதிலளித்திருக்கிறேன்.
27-6-1974 அன்று கச்சத் தீவு ஒப்பந்தம் பற்றி மத்திய அரசின் அறிவிப்பு வந்ததும், 29ஆம் தேதி யன்று சென்னைத் தலைமைச் செயலகத்திலே அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்து, அவர்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் நான் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்றப்பட்ட போது, அ.தி.மு.க. அந்தத் தீர்மானத்தை ஆதரித்துக் கையெழுத்திட மறுத்து விட்டது. அதுபோலவே கழக ஆட்சிக் காலத்தில் கச்சத் தீவை திரும்பப் பெறுவதற்கான தீர்மா னத்தை ஆளுங்கட்சியான தி.மு.க. கொண்டு வந்த போது, எதிர்க்கட்சியாக இருந்த அ.தி.மு.க., அதனை ஆதரிக்காமல் வெளிநடப்புச் செய்தது.
ஜெயலலிதா பேரவையில் பேசும்போது, 2008ஆம் ஆண்டு தனிப்பட்ட முறையில் உச்ச நீதி மன்றத்தில் அவர் வழக்குத் தாக்கல் செய்ததைக் கூறி, தி.மு.க. நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்துத்தான் 10-5-2013இல் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது ஏன்? என்று ஒரு கேள்வி எழுப்பியிருக்கிறார். 2008ஆம் ஆண்டுக்கு முன்பே 1997ஆம் ஆண்டே இந்தக் கச்சத் தீவுக்காக தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஒரு வழக்கினைத் தாக்கல் செய்து, பல ஆண்டுகள் ஆகியும் அந்த வழக்கில் ஒரு முடிவு காணப்பட வில்லை என்பதுதான் உண்மை.
15-4-2013 அன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற “டெசோ” அமைப்பின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் இறுதியாக, “1974ஆம் ஆண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யவும், கச்சத் தீவு இந்தியாவின் ஒரு பகுதிதான் என்பதைப் பிரகடனப்படுத்தவும், “டெசோ” அமைப்பின் மூலம் உச்ச நீதிமன்றத்தை அணுகுவதென முடிவெடுக்கப்பட்டது” என்று கூறப்பட்டிருப்பதில் இருந்தே, தி.மு.க. உச்ச நீதிமன்றம் செல்ல முடிவெடுத்தது டெசோ கூட்டத்தின் முடிவே தவிர, நாடாளுமன்றத் தேர்த லுக்காக அல்ல என்பதைத் தெளிவுள்ளவர்கள் புரிந்து கொள்ள முடியும்.
கச்சத் தீவுப் பிரச்சினையில் மத்திய அரசு உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்திற்கு தமிழக அ.தி.மு.க. அரசு பதிலளிக்க வில்லையே என்று 2013ஆம் ஆண்டு என்னிடம் ஒரு கேள்வி கேட்ட போது, “கச்சத் தீவு இந்தியாவுக்குத்தான் உரிமையானது என்பதைச் சுட்டிக்காட்டிடும் பல்வேறு ஆதாரங்களை எடுத்துக் காட்டி, நான் குறிப்பிட்ட வரலாற்றுப் பூர்வமான ஆதாரங்களையும், மேலும் தமிழக அரசிடம் இருக்கும் கூடுதல் ஆவணங்களையும் இணைத்து உச்ச நீதிமன்றத்தில் உரிய முறையில் தாக்கல் செய்வது மிக மிக அவசியமாகும் என்றும், அதனை தமிழக அரசு உடனே செய்திட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டேன்.
இந்தப் பிரச்சினையில் நான் எடுத்துக் காட்டியதற்கு மேலும் வலுவூட்டும் வகையில் ராமநாதபுரம் சேதுபதி சமஸ்தானத்திற்கே கச்சத்தீவு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை வழங்கிட சேதுபதியின் வாரிசுகள் முடிவு செய்திருப்பதாகவும் ஏடுகளில் செய்தி வந்துள்ளது. மேலும் கச்சத் தீவினைத் திரும்பப் பெறுவதற்கு தமிழக அரசுக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குவோம் என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள். எனவே நான் ஏற்கனவே தெரிவித்த கருத்தின்படி தமிழக அரசு இனியும் சுணக்கமாக இல்லாமல், ராமநாதபுரம் மன்னர் குடும்பத்தினர் கூறியுள்ள அந்த ஆதாரங் களையும், தமிழக அரசிடம் உள்ள ஆவணங் களையும் திரட்டி உச்ச நீதிமன்றத்தில் எடுத்துக் காட்டிட முன்வர வேண்டுமென்று மீண்டும் வலியுறுத்துகிறேன்” என்று பதிலளித்திருந்தேன்.
கச்சத் தீவு பற்றிய வழக்கில் மத்திய அரசு, கச்சத் தீவு இலங்கையின் பகுதியில் இருப்பதை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது, இந்திய எல்லைக் கோட்டுக்குள் இருந்த கச்சத் தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்ததாக மாயை ஏற்படுத்துவது தவறானது என்று வாக்குமூலம் தாக்கல் செய்த போதுகூட, அதைக் கண்டித்து 1-9-2013 அன்று நான் அறிக்கை விடுத்தேன்.
ஆனால், இதே ஜெயலலிதாவின் அ.தி.மு.க. அரசு, உயர் நீதிமன்றத்தில் 2012ஆம் ஆண்டு வழக்கறிஞர் பி. ஸ்டாலின் தொடுத்த பொது நல வழக்கில் கொடுத்த வாக்குமூலத்தில் என்ன சொன்னார்கள் தெரியுமா? “1974ஆம் ஆண்டிலும், 1976ஆம் ஆண்டிலும் இலங்கை அரசுடன் கச்சத் தீவு சம்பந்தமாகச் செய்து கொண்ட ஒப்பந்தம், தமிழக அரசோடு கலந்தாலோசனை செய்யாமலும், பாக். நீரிணையில் பல்லாண்டு காலமாக மீன் பிடிப்பதன் மூலம் வாழ்வாதாரத்தைத் தேடி வரும் ஆயிரக் கணக்கான மீனவர்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமலும் செய்யப்பட்ட ஒன்றாகும் என்று திரும்பத் திரும்ப தமிழக அரசு சுட்டிக் காட்டி வருகிறது” (The Government of Tamil Nadu has also repeatedly made it clear that the Execution of 1974 and 1976 Agreements with Sri Lanka regarding the Katcha Theevu was signed without consulting Tamil Nadu and without due consideration to the welfare of thousands of Fishermen family who depend on fishing in the Palk-bay area for centuries together) என்று தமிழக அரசே நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறது.
எனவே ஜெயலலிதா தமிழக மீனவர்கள் தினமும் அனுபவித்து வரும் வாழ்வாதாரப் பிரச்சி னைகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்பும் நோக்கத்தோடு, திட்டமிட்டு இந்தக் கச்சத் தீவுப் பிரச்சினையில் அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைக்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கிறாரே தவிர வேறல்ல. நானும் ஒவ்வொரு முறை அவர் இந்தக் குற்றச்சாட்டைக் கூறுகின்ற நேரத்திலும் விளக்கம் அளித்திருக்கிறேன். ஆனால் அந்த விளக்கம் எதையும் அவர் படிப்பதில்லையோ அல்லது படித்தும் புரிந்து கொள்ளவில்லையோ அல்லது புரிந்தும் வேண்டுமென்றே அரசியல் நோக்கத்திற்காக இப்படிப் பேசுகிறாரோ என்ற சந்தேகம்தான் ஏற்படுகிறது.
மேலும் நேற்றையதினம் சட்டப்பேரவையில் பேசும்போது, கருணாநிதி தனது பதிலை சட்ட சபைக்கு வந்து சொல்லட்டும் என்றும், கழக உறுப்பினர்களைப் பார்த்து, உங்கள் தலைவர், தலைவர் தானா அல்லது இங்கே இருக்கின்ற எதிர்க்கட்சித் தலைவர்தான் உங்கள் தலைவரா என்றெல்லாம் கேட்டு, புலனாய்வுத் துறை மூலமாகவும், தனக்குச் சாமரம் வீசும் சில ஏடுகளின் வாயிலாகவும் “சிண்டு முடியும்” வேலையில் ஈடுபட்டு, அதிலே படுதோல்வி அடைந்த காரணத்தால், தற்போது பேரவையிலேயே முதலமைச்சர் பொறுப் பிலேதான் இருக்கிறோம் என்பதையே மறந்து விட்டோ, எப்படியோ கொள்ளைப் பணத்தோடும், தேர்தல் ஆணையத்தோடும், காவல் துறை உள்ளிட்ட நிர்வாகத் துறையோடும் பல முனைக் கூட்டணி அமைத்து தேர்தலில் ஒரு சில இடங்களை மக்களின் எண்ண ஓட்டத்திற்கு எதிராகக் கூடுதலாகப் பெற்று முதலமைச்சராக அமர்ந்து விட்டோம் என்ற அடங்காத இறுமாப்பிலோ இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறார். என்னைக் கேள்வி கேட்பதற்கு முன்பு, 22ஆம் தேதிய எனது அறிக்கையில் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் ஜெயலலிதா பதில் சொல்ல வேண்டாமா? அந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லி விட்டு அல்லவா என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்க முன்வந்திருக்க வேண்டும்.
கச்சத் தீவை நான் தாரை வார்த்து விட்டதாகச் சொல்லும் ஜெயலலிதா, “கச்சத் தீவை மீட்பது விரைவில் நடக்கக்கூடிய ஒன்றாகத் தெரிய வில்லை” என்று கூறியது உண்டா இல்லையா? “கச்சத் தீவைப் பிரித்துக் கொடுத்தது, இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான்” என்று பிரதமர் நரசிம்மராவுக்கு ஜெயலலிதா எழுதியது உண்டா இல்லையா? “கச்சத் தீவில் இலங்கை நாட்டுக்கு உள்ள இறையாண்மையை ஏற்றுக் கொள்ளலாம்” என்று பிரதமர் வாஜ்பாய்க்கு ஜெயலலிதா கடிதம் எழுதியது உண்டா இல்லையா? என்றெல்லாம் நான் கேட்ட கேள்விகளுக்கு முதலில் பதில் சொல்ல வேண்டாமா? அது பற்றி வாயையே திறக்காமல், பேரவைக்கு என்னால் வர இயலாத ஓர் இடத்தினை ஒதுக்கி விட்டு, நான் அங்கே வந்து பதில் சொல்ல வேண்டுமென்பது, எந்த அளவுக்கு ஏளனம், கிண்டல், ஏகடியம் என்பதை தமிழ்நாட்டிலே உள்ள நடுநிலையாளர்களும் அரசியல் புரிந் தோரும் நன்றாகவே அறிவார்கள். பட்டுக்கோட் டைக்கு வழி எது என்று கேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்லுகிறார் ஜெயலலிதா! எங்கள் கட்சிக்கு தலைவர் யார், எங்கள் கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவர் யார் என்பதை எங்கள் கட்சியிலே உள்ள உறுப்பினர்கள் அனைவரும் அறிவார்கள். முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அது புரியவில்லை என்றால், அவர் நல்ல மருத்துவர்களை உடனடியாக நாடுவதே நல்லது!