இலங்கை ராணுவ கருத்தரங்கில் இந்தியா பங்கேற்பு: மோடி அரசு மீது கருணாநிதி தாக்கு

செவ்வாய், 29 ஜூலை 2014 (20:32 IST)
கொழும்புவில் நடைபெறவுள்ள இலங்கை ராணுவ கருத்தரங்கில் இந்தியா பங்கேற்பது என்ற மோடி அரசின் முடிவை, திமுக தலைவர் கருணாநிதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
 
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட கேள்வி - பதில் வடிவிலான அறிக்கை வருமாறு:-
 
"இலங்கை அரசு மேலும் மேலும் ஜனநாயகத்திற்கு விரோதமான காரியங்களில் தொடர்ந்து ஈடுபட்டபோதிலும், இந்திய அரசு அதனைக் கண்டிக்க முன்வராமல், இலங்கையையும் இந்தியாவில் உள்ள ஒரு மாநில அரசைப் போலக் கருதி செயல்படுகிறதே?
 
இந்தப் பிரச்சனை குறித்து நாம் தொடர்ந்து மத்திய அரசு செய்ய வேண்டியதை எடுத்துக் கூறி வலியுறுத்தியே வருகிறோம். இலங்கையைப் பொறுத்தவரை ஏற்கெனவே இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசானாலும், தற்போதுள்ள பா.ஜ.க. அரசானாலும் சிங்கள அரசுக்கு ஆதரவாக இருப்பதிலேதான் முனைப்பாக உள்ளது.
 
அடுத்த மாதம் 18 முதல் 20 ஆம் தேதி வரை கொழும்பில் இலங்கை ராணுவம் கருத்தரங்கம் ஒன்றை நடத்தவுள்ளது. அந்தக் கருத்தரங்கில் இந்திய ராணுவம் சார்பில் மேஜர் ஜெனரல் தகுதியிலே உள்ள உயர் அதிகாரிகளும், பா.ஜ.க. சார்பில் அதன் மூத்தத் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி தலைமையிலான குழுவினரும் பங்கேற்கவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்தக் கருத்தரங்கம் முக்கியமாக இலங்கைக்கு நட்பு நாடுகள் எத்தகைய பாதுகாப்பு ஒத்துழைப்பை வழங்கும் என்பதை முடிவு செய்யுமாம். "குதிரை குப்புறத் தள்ளியதோடு, குழியும் தோண்டிய கதை"யைப் போலத்தான் இந்தியாவின் இந்த முடிவு உள்ளது.
 
அதுபோலவே, இலங்கையில் தமிழ்ப் பத்திரிகையாளர்களுக்காக 26-7-2014 அன்று நடைபெறவிருந்த பயிலரங்கத்தை, இலங்கை அரசுக்கு ஆதரவான சிங்கள அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தி ரத்து செய்துவிட்டன.
 
இதுகுறித்து இலங்கையிலே உள்ள அமெரிக்கத் தூதரகம் 28 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், "இலங்கையில் பேச்சு சுதந்திரத்துக்கும் கூட்டம் கூடும் சுதந்திரத்துக்கும் தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது. இலங்கை மக்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க அந்த நாட்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த மே மாதத்தில் இலங்கையில் தமிழ்ப் பத்திரிகையாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பயிலரங்கமும் இதே காரணத்தினால் ரத்து செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இலங்கையிலே தமிழ்ப் பத்திரிகையாளர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை எதிர்த்து எங்கோ உள்ள அமெரிக்க நாடு தனது அதிருப்தியை அறிக்கை மூலம் வெளிக்காட்டிக் கொண்டிருக்கும்போது, பக்கத்திலே உள்ள இந்திய நாடு பாராமுகமாக இருப்பது உலகத் தமிழர்களுக்கெல்லாம் வேதனையைத்தான் தருகிறது.
 
தமிழ்ப் பத்திரிகையாளர் பயிலரங்கம், இலங்கை அரசின் பாதுகாப்புக் கருத்தரங்கம், ஐ.நா. விசாரணைக் குழுவுக்கு விசா மறுப்பு ஆகிய அனைத்துப் பிரச்சனைகளிலும் மத்திய அரசு எதிர்மறை அணுகு முறையையே கொண்டுள்ளது. இலங்கைத் தமிழர் பிரச்சனையில் மத்திய பா.ஜ.க. அரசு, கடந்த கால காங்கிரஸ் அரசு போல நடந்து கொள்ளாமல் தமிழ் இனத்தைப் பாதுகாத்திடும் நோக்கில் நடந்து கொள்ள வேண்டுமென்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்" என்று கருணாநிதி கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்