ஜெயலலிதாவுக்கு எதிராக திமுக பொய் வழக்கு போட்டதா?: கருணாநிதி விளக்கம்

செவ்வாய், 21 அக்டோபர் 2014 (13:58 IST)
ஜெயலலிதாவுக்கு எதிராக திமுக பொய் வழக்கு போட்டதாக கூறப்படும் புகாருக்கு கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.
 
இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை வேறு மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யக்கோரி திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் 18.11.2003 அன்று அளிக்கப்பட்ட தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் வழக்கு விசாரணையை கர்நாடக மாநிலத்திற்கு மாற்றி உத்தரவிட்டது.
 
அந்த உத்தரவில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், எஸ்.என்.வரியவாவும், எச்.கே.சீமாவும், ''ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தனது வாதத்தில்; மனுதாரரான அன்பழகன் அரசியல் எதிரி என்ற முறையில் இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருப்பதாகவும், அரசியல் காரணங்களுக்காகவே இந்த வழக்கு தொடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார். இந்த வாதம் ஏற்புடையதல்ல. ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளுக்கு சட்டப்பேரவைக்குள்ளும், வெளியேயும் முக்கியமானதோர் இடம் உண்டு. ஆட்சியிலே இருப்பவர்களைக் கண்காணிக்க வேண்டிய முக்கிய பொறுப்பு எதிர்க்கட்சிகளுக்கு உண்டு. ஆட்சியிலே உள்ள கட்சியின் தவறான செயல்முறைகளையும், நடவடிக்கைகளையும் எதிர்ப்பதுதான் அவர்களுடைய முக்கியமான ஆயுதமாகும்.
 
பொதுவாக மக்களுடைய குறைகளை எதிரொலிக்கக் கூடியவர்களே இவர்கள்தான். அந்த நிலையில் எதிர்க்கட்சி என்ற முறையில் மனுதாரர் உண்மையில் மாநிலத்தின் அரசு நிர்வாகத்திலும், நீதி நிர்வாகத்திலும் அக்கறை உள்ளவராவார். அப்படிப்பட்டவரிடம் இருந்து தாக்கல் செய்யப்படுகின்ற மனு, அரசியல் காரணத்திற்காக போடப்பட்ட ஒன்று என்று கூறி அலட்சியப்படுத்தப்படக் கூடியதல்ல. இந்த வழக்கில் மனுதாரர் பல நியாயமானதும், ஏற்கத்தக்கதுமான காரணங்களை அதாவது, இதிலே நீதி மறுக்கத்தக்க வகையிலும், ஒருதலைப்பட்சமாகவும் வழங்கக் கூடிய நிலை ஏற்படலாம் என்ற வலுவான ஐயங்களை எழுப்பியிருப்பதை எங்கள் கருத்தின் அடிப்படையில் ஒப்புக்கொள்கிறோம்.
 
குற்றஞ்சாட்டப்பட்டவர்களுடன் எந்த அளவுக்கு அரசு தரப்பினர் இணைந்து செயல்பட்டிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, சாதாரணமான ஏதோவொரு காரணத்தைக் கூறி இந்த சாட்சிகள் மீண்டும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அதற்கு ஜெயலலிதாவின் அரசினால் நியமிக்கப்பட்ட அரசாங்க வழக்கறிஞர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அனுமதி கொடுத்திருக்கிறார். இது ஒன்றே எந்த அளவுக்கு நீதி இந்த வழக்கிலே திசை திருப்பப்பட்டுள்ளது என்பதை நன்றாக விளக்குகின்றது.
 
அரசின் புதிய வழக்கறிஞர், குற்றவாளிகளோடு இணைந்து செயல்படுவது நன்றாக தெரிகிறது. அதன் காரணமாக பொதுவாக நீதி கிடைக்காது என்ற ஒரு நம்பத்தகுந்த ஐயம் மக்கள் மனதிலே எழுந்துள்ளது. நீதி திசைதிரும்பிச் செல்வது நிச்சயமாக தெரிகின்றது. 313வது விதிப்படி நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்படும்போது, ஜெயலலிதா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாமல் இருக்க தாக்கல் செய்த தவறான மனுவிற்கு அரசு வழக்கறிஞர் எதிர்ப்பே தெரிவிக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது வருந்தத்தக்கது. நீங்கள் எவ்வளவு பெரியவராக இருந்த போதிலும், உங்களைவிட சட்டம் பெரியது. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், நீதியின் பாதையிலே குறுக்கிட்ட செயல்தான் நடைபெற்றுள்ளது.
 
எங்களின் கருத்துப்படி; மனுதாரர் நியாயப்பூர்வமான, அர்த்தம் பொதிந்த சந்தேகங்களை எழுப்பி, அதாவது நீதி திசை திரும்பியும், பாரபட்சமாகவும் செல்வதால் எங்களுடைய குறுக்கீடு அவசியம் தேவை என்று கோரிக்கையை வைத்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை" இவ்வாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் இருவர், இப்போதல்ல; 2003 ஆம் ஆண்டிலேயே அதாவது 11 ஆண்டுகளுக்கு முன்பே, இந்த வழக்கை தமிழகத்தில் இருந்து பெங்களூருக்கு மாற்றிய போதே, கருத்து தெரிவித்திருக்கிறார்கள் என்பதை, நாம் ஏதோ பொய் வழக்கு போட்டதாக இன்றைக்கு பழி சுமத்துபவர்கள் தயவுசெய்து எண்ணிப்பார்க்க வேண்டுமென்பதற்காகத்தான், மீண்டும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் வார்த்தைகளை இங்கே நினைவூட்டியுள்ளேன்" என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்