ஈழத்தமிழர் விவகாரம்: மத்தியில் ஆட்சி மாற்றம் எதற்காக? - கருணாநிதி

திங்கள், 14 ஜூலை 2014 (19:31 IST)
இலங்கைத்  தமிழர் விவகாரத்தில் கடந்த கால ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கையாண்ட அதே அணுகுமுறையை தற்போது பாஜக அரசும் மேற்கொள்வது சரிதானா? என்று திமுக தலைவர் கருணநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையிலே வாழும் இந்தியத் தமிழர்களைப் பாதுகாக்க இந்தியா முன்வர வேண்டாமா? என்றும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்ற போது இலங்கையிலே வாழும் இந்தியத் தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா நடந்து கொள்ள வேண்டுமென்று பாஜகவைச் சேர்ந்த யஷ்வந்த் சின்கா நாடாளுமன்றத்தில் பேசியது இன்று மறந்து போய் விட்டதா? என்றும், தங்கள் பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு பிரதமர் மோடி தலைமையிலே உள்ள பாஜக ஆட்சியில் ஏற்படும் என்று உலகத் தமிழர்கள் எல்லாம் நம்பிக் கொண்டிருக்கிறார்களே; கடந்த கால ஆட்சியிலே எடுத்த முடிவினைத்தான் இந்த ஆட்சியிலும் எடுப்போம் என்றால், ஆட்சி மாற்றம் எதற்காக? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
மேலும் ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லையா? ஈழத் தமிழர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்த பாஜக ஆட்சியில் விடிவு காலம் ஏற்படும் என்று இன்னமும் நம்புகிறேன். இலங்கைத் தமிழர் பிரச்சனையில் நமது நம்பிக்கை மெய்யாகுமா? என்று தனது அறிக்கையில் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்