சிறையில் சகல வசதிகளுடன் சசிகலா - பரபரப்பு தகவல்

Webdunia
வியாழன், 13 ஜூலை 2017 (12:09 IST)
பெங்களூர் சிறையில் அடைபட்டிருக்கும் சசிகலா சகல வசதிகளுடன் இருப்பதாக கர்நாடக சிறைத்துறை டிஜிபி ரூபா புகார் தெரிவித்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருட சிறைத்தண்டனை பெற்று, தற்போது பெங்களூர் அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சசிகலா. அவரோடு அவரின் உறவினர் இளவரசியும் அடைக்கப்பட்டுள்ளார். மற்றொரு அறையில் சுதாகரன் அடைக்கப்பட்டுள்ளார். சசிகலா சிறைக்கு சென்ற சில நாட்களிலெயே அவருக்கு அங்கு ஏசி உட்பட சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் தற்போது சிறைத்துறை டிஐஜி-யே புகார் தெரிவித்துள்ளார்.
 
பொதுவாக அரசியல் பிரபலங்கள் மற்றும் பணக்கார விஐபிகள், சிறைக்கு செல்ல நேரிட்டால், சிறைத்துறை அதிகாரிகளை கையில் போட்டுக்கொண்டு, சில சலுகைகளை அனுபவிப்பது காலம் காலமாக நடந்து வருகிறது. 
 
இந்நிலையில்தான் அக்ரஹார சிறையில் ஆய்வு நடத்திய கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா, சிறையில் சசிகலாவிற்கு தேவையான வசதிகளை சிறைத்துறை அதிகாரிகள் செய்து கொடுத்துள்ளதாகவும், அதற்காக பல கோடி ரூபாய் பணம் கைமாறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதில் கர்நாடகத்தில் வசிக்கும் சில காங்கிரஸ் பிரமுகர்கள் உதவியுள்ளது தெரியவந்துள்ளது. 


 

 
முக்கியமாக, சசிகலாவை ஏராளமானோர் வந்து சந்திப்பதற்கு அனுமதியும், சசிகலாவிற்கு என தனியாக ஒரு சமையல் அறை வசதியும் செய்து கொடுக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், சில வசதிகள் அவருக்கு செய்து கொடுக்கப்பட்டிருப்பதாகவும், இதற்காக சிறைத்துறை டிஜிபி சத்யநாராயணாவிற்கு ரூ.2 கோடி வரை பணப்பட்டுவாடா செய்யப்பட்டிருப்பதாகவும் ரூபா கூறியுள்ளார். 
 
ஆனால் இந்த குற்றச்சாட்டை டிஜிபி சத்தியநாராயனா மறுத்துள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் எனவும், சத்தியநாராயணா மீது நடவடிக்கை பாயும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 
 
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனையை எதிர்த்து சசிகலா தரப்பு மறுசீராய்வு மனு தாக்கல் செய்திருக்கும் நிலையில், இந்த புகார் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தும்  எனத் தெரிகிறது.
அடுத்த கட்டுரையில்