சினிமா வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு விட்டது என்று பணத்தை திருப்பி கேட்பது சரியல்ல - கமல்ஹாசன்

செவ்வாய், 24 மார்ச் 2015 (16:14 IST)
கமல்ஹாசன் நடித்து அடுத்து வெளிவர உள்ள படம் உத்தம வில்லன். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். இப்படம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு  சென்னையில் நடைபெற்றது. 
 
அதில் கலந்துகொண்ட கமல்ஹாசன் பேசியபோது,
 
நான் ஒவ்வொரு படத்திலும் இடையூறுகளை சந்திக்கிறேன். என் முகவரியை கேட்டால் இடையூறு என்று சொல்லலாம். வீட்டு நம்பருடன் இடையூறு தெரு என்று கூட போடலாம். அந்த அளவுக்கு எதிர்ப்புகளை சந்திக்கிறேன். என்னை மட்டும் ஏனோ குறிவைத்து எதிர்க்கிறார்கள். இது நல்ல வண்டி இலவசமாக ஏறிப்போய் அடுத்த நிறுத்தத்தில் இறங்கி விடலாம் என்று எண்ணி இப்படி செய்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
 
சினிமா என்பது தயாரிப்பாளர்களுக்கு வியாபாரம். வியாபாரம் முடிந்தபிறகு நஷ்டம் ஏற்பட்டு விட்டது என்று பணத்தை திருப்பி கேட்பது சரியல்ல. ரசிகர்கள் படம் பார்க்க வருகிறார்கள். பாதியில் எழுந்து படம் பிடிக்கவில்லை எனவே பாதி பணத்தை திருப்பி தாருங்கள் என்று கேட்டால் எப்படி முடியும்? அது சாத்தியமானது அல்ல.
 
விஸ்வரூபம் திரைப்படம் எப்போது வெளிவரும் என்பதை ஆஸ்கர் ரவிசந்திரனிடம்தான் கேட்க வேண்டும். மருதநாயகம் படத்தை எடுக்க என் நண்பர்கள் முயற்சிக்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்