தாலி அகற்றும் நிகழ்விற்கு தடை: கி.வீரமணி மீது வழக்குப்பதிவு

ஞாயிறு, 12 ஏப்ரல் 2015 (19:27 IST)
திராவிடர் கழகம் சார்பில் சென்னை பெரியார் திடலில் வருகிற 14 ஆம் தேதி (நாளை மறுநாள்) நடைபெறவிருந்த தாலி அகற்றும் நிகழ்வுக்கு இன்று தடை விதித்துள்ள சென்னை காவல்துறையினர் இது தொடர்பாக திராவிடர் கழகம் தலைவர் கி. வீரமணி மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
 
அம்பேத்கார் பிறந்தநாளையொட்டி சித்திரை 1 ஆம் தேதி (ஏப்ரல் 14) சென்னையில் திராவிடர் கழகம் சார்பில் தாலி அகற்றும் நிகழ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு சிவசேனா, இந்து மக்கள் கட்சி மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு இந்து அமைப்பினரும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் உள்ளிட்ட சில அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
 
இதற்கிடையில், ஏப்ரல் 14 ஆம் தேதி பெரியார் திடலில் பெண்கள் தாங்களே எவ்வித கட்டாயமோ, நிர்ப்பந்தமோ இன்றி, தெளிவான, துணிவான உணர்வுடன் தாலி அகற்றும் நிகழ்ச்சியை நடத்திக்கொள்ளுகின்றனர் என்றும், இதை தடுக்க எவருக்கும் சட்டப்படி உரிமை இல்லை என்றும், இந்துக்கள் மனம் புண்படுகிறது என்ற வாதம் பொய்யானது என்றும் கி.வீரமணி தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில், இந்த போராட்டத்துக்கு சென்னை போலீசார் தடை விதித்துள்ளதாகவும், இது தொடர்பாக திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் சென்னை போலீஸ் (வேப்பேரி) உதவி கமிஷனர் ஐயப்பன் செய்தி நிறுவனமான பி.டி.ஐ.-யிடம் இன்று மாலை தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்