கச்சத் தீவை திரும்பப் பெறவேண்டும்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

செவ்வாய், 5 ஜனவரி 2016 (15:15 IST)
இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான கச்சத் தீவை, இலங்கையிடமிருந்து திரும்பப் பெறவேண்டும் என்ற தமிழக அரசின் நிலையை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.



 

 
 
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த  8 மீனவர்கள், 4ம் தேதி இயந்திரப் படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அவர்களை இலங்கைக் கடற்படையினர் பிடித்துச் சென்றுள்ளதாகவும், மீனவர்களும், அவர்களின் படகுகளும் இலங்கையில் உள்ள முல்லைத்தீவு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அறிகிறேன்.
 
இதே போல, 5ம் தேதி அதாவது இன்று ராமநாதபுரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களும், புதுக்கோட்டையைச் சேர்ந்த 4 மீனவர்களும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு காங்கேசன்துறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது பெரும் கவலையை ஏற்படுத்துகின்றன.
 
பாக். நீரிணையில் ஆழ்கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளாவதும், கடத்திச் செல்லப்படுவதும் தொடர்ந்து தங்குதடையின்றி நடைபெற்று வருகிறது. தமிழக மீனவர்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இந்தச் செயல்கள் பெரும் கவலையை ஏற்படுத்துகின்றன.
 
இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான கச்சத் தீவை, இலங்கையிடமிருந்து திரும்பப் பெறவேண்டும் என்ற தமிழக அரசின் நிலையை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். இலங்கையுடனான சர்வதேசக் கடல் எல்லையை முடிந்துபோன விஷயமாகக் கருதக்கூடாது என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.
 
கச்சத் தீவை இலங்கைக்கு தாரைவார்த்துக் கொடுத்த 1974-1976-ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட உடன்பாடுகள் இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்பதைச் சுட்டிக் காட்டி, தனிப்பட்ட முறையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளேன். இந்த வழக்கில் தமிழக அரசும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.
 
கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3-ஆம் தேதியும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதியும் தங்களிடம் அளித்த கோரிக்கை மனுவில், தமிழக மீனவர்கள் ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடிக்கவும், தேவையான உபகரணங்களை வாங்கவும் ரூ.1,520 கோடிக்கான விரிவான சிறப்பு நிதியுதவித் திட்டத்தையும், மீன்பிடித் துறைமுகங்களை ஆழப்படுத்தி பராமரிப்பதற்காக ஆண்டுக்கு ரூ.10 கோடி வீதம் தொடர் மானியம் வழங்க வேண்டும் என்பதையும் தெரிவித்திருந்தேன்.
 
அண்மையில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் உட்பட 104 மீனவர்களும் அவர்களுக்குச் சொந்தமான 66 மீன்பிடி படகுகளுடன் இலங்கையில் காவலில் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் படகுகள் நீண்ட காலமாக பயன்படுத்தப்படாததாலும், வழக்கத்தைக் காட்டிலும் கடுமையான பருவமழை இந்த ஆண்டு பெய்ததாலும் பெரும் சேதத்துக்குள்ளாகியுள்ளன.
 
எனவே, மீனவர்களின் ஒரே வாழ்வாதாரமான இந்தப் படகுகள் கூடிய விரைவில் புதுப்பிக்கப்பட்டு, மீனவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அப்பாவி மீனவர்கள் பண்டிகைக் காலம் முழுவதும் இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ளதால், அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பண்டிகையைக் கொண்டாட முடியாத துரதிருஷ்டமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
 
இந்தப் பிரச்னையில், இலங்கை அதிகாரிகளுடன் வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமான முறையில் நேரடியாகத் தொடர்புகொண்டு, பிரச்னைக்கு முடிவு காண தாங்கள் நேரடியாகத் தலையிட வேண்டும்.
 
இந்த விவகாரத்தில் தாங்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்