’ஜெயலலிதாவை அடுத்து ஆட்சிக்கு வர விடமாட்டேன்’ - விஜயகாந்த் சூளுரை

ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2015 (16:32 IST)
ஜெயலலிதாவை அடுத்து ஆட்சிக்கு வர விடமாட்டேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் சூளுரைத்துள்ளார்.
 

 
விஜயகாந்த் தனது பிறந்தநாளை முன்னிட்டு, 'மக்களுக்காக மக்கள் பணி' என அறிவித்து, அந்த திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார். நேற்றிரவு கரூரை அடுத்த தரகம்பட்டியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
 
இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய விஜயகாந்த், "அதிமுக கூட்டணியில் இருந்தபோது பால் விலை, பேருந்து கட்டணம் உயர்ந்ததை தட்டிக்கேட்டேன். அதை பொறுக்காத ஜெயலலிதா, என் மீது அவதூறுகளை பரப்பினார். இதனால்தான் அந்தக் கூட்டணியில் இருந்து விலக நேரிட்டது.
 
திமுக என்று ஒரு கட்சி இருக்கக்கூடாது என அதிமுகவுடன் கூட்டணி வைத்தேன். மக்கள் தகுந்த பாடம் புகட்டினால் இரண்டு கட்சிகளுமே இல்லாமல் போய் விடும். மக்களுக்காக விஜயகாந்த் வாழ்ந்தான் என சரித்திரம் பேச வேண்டும். எந்த இடத்திலும் நான் யாரையும் கண்டு பயப்பட மாட்டேன். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியான நானும் இல்லை. திமுகவும் இல்லை.
 
சட்டசபையில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், 'விவசாயிகள் யாரும் தற்கொலை செய்யவில்லை' என கூறுகிறார்.  ஆனால் ஜெயலலிதா 3 பேர் மட்டும் தற்கொலை செய்ததாக கூறுகிறார். மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள், நீங்கள் அனைவரும் உத்தமர்தானா?. மக்களுக்கு துரோகம் செய்யும் யாரையும் விடமாட்டேன். என் மீது போடப்படும் வழக்குகளை பற்றி பயப்பட மாட்டேன்.
 
தேர்தலின்போது மோடியா? லேடியா என பேசினார்கள். இப்போது மோடி வென்றதும் ஜெயலலிதா ஓடோடி செல்கிறார். சிவாஜிக்கு மணி மண்டபம் கட்ட வேண்டும் என கடந்த 2001இல் நான் நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோதே கோரிக்கை விடுத்தேன்.
 
அதை இப்போது, ஜெயலலிதா 110 விதியின் கீழ் அதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இதற்கு என்ன காரணம் என்றால், ஓட்டுக்காகவே சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டப்போவதாக ஜெயலலிதா கூறியுள்ளார். அடுத்து அவர்கள் ஆட்சிக்கு வருவார்கள் என்று நினைக்கிறார்கள். அவர்கள் அடுத்து ஆட்சிக்கு வர இந்த விஜயகாந்த் விடமாட்டான்” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்