ஜெயலலிதா தமிழக முதலமைச்சராக நாளை காலை 11 மணிக்கு பதவியேற்பு

வெள்ளி, 22 மே 2015 (14:41 IST)
அதிமுக பொதுச்செயலாளர்  ஜெயலலிதா, நாளை காலை 11 மணிக்கு, தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.  
 
சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக  எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று காலை நடந்தது. இந்த கூட்டத்தில், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், அதிமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக ஜெயலலிதா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இதனையடுத்து, தமிழக முதலமைச்சர் பதவியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்தார். மேலும், அதிமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக ஜெயலலிதா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட கடிதத்தையும் அளித்தார்.  
 
இதையடுத்து, தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொள்ளுமாறு ஜெயலலிதாவுக்கு ஆளுநர்  அழைப்பு விடுத்தார். அதன் பேரில்,  இன்று மதியம் ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநர் ரோசய்யாவை சந்தித்துப் பேசினார். 
 
அப்போது, ஆளுநர் மாளிகைக்கு வந்த ஜெயலலிதாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்பு, ஆளுநர் ரோசய்யாவுடன் ஜெயலலிதா பேச்சுவார்த்தை நடத்தினார். 
 
அப்போது, புதிய அமைச்சர்களின் பட்டியலை ஜெயலலிதா ஆளுநரிடம் அளித்தார். ஜெயலலிதாவுடன் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிசாமி, பழனியப்பன், வைத்தியலிங்கம் உள்ளிட்ட 29 பேர் பதவியேற்க உள்ளனர்.   

வெப்துனியாவைப் படிக்கவும்