ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் மர்ம மரணம்: கேள்வி எழுப்பும் மு.க.ஸ்டாலின்

திங்கள், 24 ஏப்ரல் 2017 (16:42 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஒருவர் மர்மமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.


 
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமாக பங்களா ஒன்று கொடநாட்டில் உள்ளது. ஜெயலலிதா அடிக்கடி ஓய்வுக்கு செல்லும் இடம் இந்த கொடநாடு எஸ்டேட் தான். ஜெயலலிதா இருக்கும் போதே அந்த பங்களா மர்மமான ஒன்றாகவே பார்க்கப்பட்டது.
 
இந்த எஸ்டேட்டில் சுமார் 500 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இந்நிலையில் கொடநாடு எஸ்டேட்டில் காவலாளியாக பணிபுரிந்து வந்த ஓம்பகதூர் என்பவர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் மற்றொரு காவலாளி கிஷன் பகதூர் கட்டிப்போடப்பட்டிருந்தார்.
 
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கிஷன் பகதூரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயலலிதாவின் மரணத்தின் மர்மமே இன்னமும் விலகாத நிலையில் அவரது கொடநாடு எஸ்டேட்டின் காவலர் மர்மமான முறையில் இறந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் இது தொடர்பாக திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். ஜெயலலிதா மறைந்த பிறகு கொடநாடு எஸ்டேட் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பதும் மர்மமாக உள்ளது. எனவே ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை தேவை என்பது போல, கொடநாடு எஸ்டேட் காவலாளியின் மர்ம மரணம் குறித்தும் உரிய விசாரணை நடத்த வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்