ஜெயலலிதா, சென்னை திரும்பினார்; கொட்டும் மழையிலும் உற்சாக வரவேற்பு

சனி, 18 அக்டோபர் 2014 (17:28 IST)
21 நாள் சிறைவாசத்தை முடித்து விடுதலையான ஜெயலலிதா, தனி விமானம் மூலமாகச் சென்னைக்குத் திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர்களும் தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
 
விமான நிலையத்திலிருந்து போயஸ் கார்டன் வரை தொண்டர்கள் பல்லாயிரம் பேர், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், சாலையோரம் காத்திருந்து அவரை வரவேற்றனர். அதிமுகவின் கொடிகளை ஏந்தியும் ஜெயலலிதாவின் படங்களைப் பிடித்துக்கொண்டும் பல வகையான பதாகைகளைப் பிடித்தவாறும் அவர்கள், வாழ்த்துக் குரல்களை எழுப்பினர். ஜெயலலிதா அவர்களை நோக்கிக் கையசைத்து, இரட்டை விரல்களைக் காட்டி, அவர் தம் வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டார்.

மேள தாளங்களை முழக்கியும் பெண்கள் ஆரத்தி எடுத்தும் அம்மா, அம்மா என முழங்கியும் தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.

கோட்டூர்புரம் அருள்மிகு வரசித்தி விநாயகர் கோவிலில் ஜெயலலிதா, பிள்ளையாரை வணங்கி வழிபட்டார்.
 
ஜெயலலிதா சென்னைக்குத் திரும்பியதை அடுத்து, அதிமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் குத்தாட்டம் போட்டும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். 
 
போயஸ் கார்டனில் பெரும் எண்ணிக்கையிலான தொண்டர்கள் குவிந்துள்ளனர். ஜெயா தொலைக்காட்சி, ஜெயலலிதாவின் வருகையை நேரலைக் காட்சியாக ஒளிபரப்பி வருகிறது. ஜெயலலிதாவின் கார் வரும் பாதை நெடுகிலும் காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்