விஜயகாந்த், அன்புமணிக்கு செக்: அரசியல் சதுரங்கம் ஆடும் ஜெயலலிதா!

திங்கள், 21 மார்ச் 2016 (12:51 IST)
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வரும் சட்டசபை தேர்தலில் எதிரணிகளை வீழ்த்தி மீண்டும் ஆட்சியை பிடிக்க பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார்.


 
 
தேர்தல் நெருங்கி வருவதால் கடந்த சில நாட்களாக ஜெயலலிதா மௌனமாக பல அதிரடி பணிகளை செய்து வருகிறார். கட்சிக்கு உள்ளே களையெடுத்துக்கொண்டு இருந்த அவர், தற்போது எதிரணிகளையும் களையெடுக்க ஆரம்பித்து விட்டதாக கூறப்படுகிறது.
 
ஜெயலலிதாவின் அடுத்த இலக்கு தன்னை எதிர்த்து இந்த தேர்தலில் களம் இறக்கும் முதல்வர் வேட்பாளர்கள். ஜெயலலிதாவை எதிர்த்து இந்த தேர்தலில், திமுக-வில் ஸ்டாலின், தேமுதிகவில் விஜயகாந்த், பாமகவில் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பிரதானமாக இருக்கிறார்கள்.
 
இவர்களை வீழ்த்த ஜெயலலிதா பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. மு.க.ஸ்டாலினை எதிர்த்து அதிமுக அவைத் தலைவர் மதுசூதனனை களமிறக்க ஜெயலலிதா முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
 
தேமுதிக தலைவர் விஜயகாந்த் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை வீழ்த்த முடிவெடுத்துள்ள ஜெயலலிதா, அவருக்கு எதிராக பண்ருட்டி ராமச்சந்திரனை களமிறக்க உள்ளாராம். தேமுதிகவில் அவைத்தலைவராக இருந்து பின்னர் விஜயகாந்தின் செயல்பாடுகள் பிடிக்காமல் அதிமுகவில் சேர்ந்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.
 
பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணிக்கு எதிராக அதிமுக கூட்டணி கட்சியான தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகனை நிறுத்த உள்ளாராம் ஜெயலலிதா என தகவல்கள் வருகின்றன. பண்ருட்டி வேல்முருகன் கருத்து வேறுபாடு காரணமாக பாமகவில் இருந்து பிரிந்து தனி கட்சி தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கும் அங்கு பரவலாக செல்வாக்கு உள்ளது.
 
தேர்தலில் தனது சதுரங்க ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார் ஜெயலலிதா. எதிரிகளை வீழ்த்த இருந்த இடத்தில் இருந்தே அம்புகள் எய்து வரும் ஜெயலலிதாவுக்கு தேர்தலில் பலன் கிடைக்குமா இல்லை இந்த ஆட்டத்தில் அவருக்கு தோல்வி கிடைக்குமா என்பது தேர்தலுக்கு பின்னரே தெரியும்.

வெப்துனியாவைப் படிக்கவும்