கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றாதவர் ஜெயலலிதா: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

திங்கள், 28 செப்டம்பர் 2015 (22:47 IST)
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கொடுத்த வாக்குறுதியையே காப்பாற்றாதவர், ஆட்சி போகும் நிலையில் கொடுக்கும் வாக்குறுதியை எப்படி காப்பாற்றுவார் என்று திமுக பெருளாளர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

 
இது குறித்து, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
இதுவும் ஒரு 110 அறிவிப்பு. "மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு பத்து லட்சம் கடன் கொடுக்கப்படும். அதில் 25 சதவீதம் மான்யமாக வழங்கப்படும்" என்று 2011 அதிமுக தேர்தல்அறிக்கையில் அறிவித்தார். இன்னும் அது நிறைவேறவில்லை.
 
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கொடுத்த வாக்குறுதியையே காப்பாற்றாதவர், ஆட்சி போகும் நிலையில் கொடுக்கும் வாக்குறுதியை எப்படி காப்பாற்றுவார்?"
 
"திமுக ஆட்சி நடைபெற்ற போது மகளிர் சுய உதவிக்குழுக்களை தேர்தலுக்கு பயன்படுத்துகிறார்கள் என்று குற்றம் சாட்டியவர் ஜெயலலிதா. இப்போது தேர்தல் வருகின்ற காரணத்தால் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கைபேசி என்று அறிவிக்கிறார். தேர்தல் நாடகத்தை தொடங்கி விட்டார். இனி எஞ்தியிருக்கின்ற நாட்களில் இது போன்ற அறிவிப்புகளுக்கு பஞ்சமிருக்காது".
 
"சட்டமன்றத்திற்கு அரை மணி நேரம் வரும் ஜெயலலிதா தேர்தல் அறிவிப்புகளை வெளியிடத்தான் வருகிறார். ஏற்கனவே மாநில நிதிநிலைமை மோசம். 2.11 லட்சம் கோடி கடனில் மூழ்கியிருக்கிறது. நிதிநிலைமை பற்றி கவலைப்படாமல் தமிழகம் எக்கேடு வேண்டுமானாலும் கெடட்டும் என்று ஜெயலலிதா 110 அறிவிப்புகளை வெளியிடுகிறார். இதுவரை அவர் அறிவித்த பல அறிவிப்புகள் "வெற்று அறிவிப்புகளாகவே" கடந்து போயிருக்கின்றன. இந்த அறிவிப்பும் கடந்து போகும்".
 
"கைக்குழந்தையைக் காப்பாற்ற இந்த அரசு மிகவும் அலட்சியமாக உள்ளது. இன்றைக்கு கூட டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையில் பிறக்கும் குழந்தைகள் இறப்பு 36 சதவீதம் அதிகரித்துள்ளது என்று செய்தி வெளியிட்டிருக்கிறது. கைக்குழந்தையை காப்பாற்றாத ஜெயலலிதா இப்போது கைபேசி அறிவிக்கிறார்"
 
"1989ல் மகளிர் சுய உதவிக்குழுக்களை உருவாக்கியது திமுக அரசு. அவர்களுக்கு கடன் கொடுத்தால்தானே கைபேசி பயன்படுத்த முடியும். முதலில் சுய உதவிக்குழுக்களுக்கு தேர்தல் அறிக்கையில் சொன்னபடி கடன் கொடுக்கட்டும். பிறகு கைபேசி கொடுக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்