அப்பல்லோவில் ஜெயலலிதா உற்சாகம்: தேர்தல் வெற்றியால் மகிழ்ச்சி!

புதன், 23 நவம்பர் 2016 (08:56 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 60 நாட்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தமிழகத்தில் மூன்று சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.


 
 
திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத்தேர்தலும், தஞ்சை, அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கு சட்டப்பேரவை பொது தேர்தலும் கடந்த 19-ஆம் தேதி நடைபெற்று நேற்று அதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தமிழகத்தின் ஆளும் கட்சியும் பிரதான அரசியல் கட்சியுமான அதிமுக இந்த மூன்று தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
 
அதிமுக தலைமை மருத்துவமனையில் உள்ள நிலையில் இந்த தேர்தலில் அந்த கட்சி வெற்றி பெற்றது அவர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவையும் இந்த வெற்றி உற்சாகமடைய வைத்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.
 
வாக்கு எண்ணிக்கையை தொலைக்காட்சி மூலம் பார்த்துவந்த ஜெயலலிதா அதிமுக வேட்பாளர்கள் முன்னிலை பெற்று வந்ததையும் வெற்றி பெற்றதையும் பார்த்து மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார். மேலும் வாக்கு எண்ணிக்கை கள நிலவரங்களை இடைஇடையே தொலைப்பேசி மூலம் கேட்டு தெரிந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த வெற்றியை தொடர்ந்து தோழி சசிகலாவிடம் ஆனந்த கண்ணீர் வடித்த ஜெயலலிதா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாக மருத்துவமனை அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்